India
“கொரோனா பீதி: மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை”: தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு!
கொரோனா என்ற கொடிய அரக்கன் பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு வருகிறது. மேலும் பல்வேறு தொழில்கள் முடங்கி அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். அத்துடன் பலரையும் தனது கோரப்பிடியில் வீழ்த்தி அவர்களது உயிரை கொரோனா குடித்து வருகிறது.
இந்த நிலையில் தார்வாரில் கொரோனாவால் வேலை இழந்ததாலும், கொரோனா பீதியிலும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், தனது மனைவி, மகளை கொன்று தானும் தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம், புறநகரில் காவலிகாய் பகுதியில் வசித்து வந்தவர் மவுனேஷ் பத்ரா (வயது 36). இவரது மனைவி அர்பிதா (வயது 28). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் சுக்ருதா என்ற மகள் இருந்தாள். மவுனேஷ் பத்ராவின் சொந்த ஊர் கதக் மாவட்டம் ரோணா தாலுகா ஆசோடி கிராமம் ஆகும்.
தார்வாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்ததால், கடந்த சில ஆண்டாக இங்கே அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் அவர் வேலையை இழந்தார்.
மேலும் சம்பளமும் குறைந்த அளவில் வழங்கப்பட்டு வந்தது. இதனால் அவர் மனம் உடைந்து இருந்து வந்தார். இதற்கிடையே அர்பிதாவுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்தது. மேலும் சிறுமி சுக்ருதாவுக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். அதைதொடர்ந்து அர்பிதாவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மவுனேஷ் பத்ரா மருந்து, மாத்திரைகள் வாங்கி கொடுத்தார். இருப்பினும் அவர்களுக்கு குணமாகவில்லை. இதனால் கொரோனா பீதியில் இருந்த அவர் நேற்று இரவு வீட்டில் வைத்து தனது மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். பின்னர் அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தார்வார் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தார்வார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு மவுனேஷ் எழுதிவைத்திருந்த உருக்கமான கடிதம் போலிஸாரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில், தான் பணியாற்றி வந்த நிறுவனத்தில் சிலருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது எனது மனைவி, மகளுக்கு கொரோனா அறிகுறி தென்படுகிறது. எனது மனைவிக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் உள்ளது. இதனால் அவர் உயிர்பிழைப்பது கடினம். இதனால் நாங்கள் எங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம்.
மேலும் எங்கள் வீட்டில் ரூ.60 ஆயிரம் ரொக்கம், 40 கிராம் தங்க நகைகள் உள்ளது. நான் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். பணம், நகைகளை வைத்து அந்த கடனை அடைத்துவிடுங்கள் என்றும் அந்த கடிதத்தில் அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!