India

புதுச்சேரியில் முதன்முறையாக மரத்தடியில் நடந்த சட்டசபைக் கூட்டம் : எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று எதிரொலி!

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் ஆகியவை கடந்த 20ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பேடி உரையைத் தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் உரையை படிக்க அவகாசம் கேட்டு வேறு தேதியில் சட்டசபையை நடத்துமாறு கிரண்பேடி கடிதம் அனுப்பினார். இதற்கு பதில் அளித்து முதல் அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதினார்.

இதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, கவர்னர் கிரண்பேடி சட்டசபைக்கு உரையாற்ற வராமல் புறக்கணித்தார். ஆனால் முதலமைச்சர் நாராயணசாமி திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மற்றும் துறைவாரியான மானியக் கோரிக்கைகளை சட்டசபையில் முன்னிலைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்றுமுன்தினம் மாலை கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், முதியோர் பென்ஷன் மற்றும் நலத்திட்டங்கள் போன்றவை வழக்கம்போல் கிடைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

இதனையடுத்து கவர்னர் கிரண்பேடி நேற்று (24ந் தேதி) சட்டசபைக்கு வந்து தனது உரையை ஆற்றினார். இருப்பினும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லஷ்மி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் அவரது உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜெயபாலனுக்கு நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று சட்டசபைக் கூட்டத்தொடர் நடக்கவிருந்த, மைய மண்டபம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. இருப்பினும், எம்.எல்.ஏ.,க்களில் சிலர் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து அச்சம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தின் முன்புறம் உள்ள மரத்தடியில் சட்டசபைக் கூட்டத்தை நடத்துவதற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து முடிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து இரவோடு இரவாக மரத்தடி முன்பாக பந்தல் போடப்பட்டு, சட்டசபை போன்றே நாற்காலிகள் போடப்பட்டன.

இன்று ( 25ந் தேதி) பகல் 12.30 மணிக்கு சட்டசபைக் கூட்டம் மரத்தடியில் கூடியது. பின்னர் 2.30 மணியளவில் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இன்று நடந்த கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனையில், யார்? யாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது நாளை காலை தெரியும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: “கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் நிவாரண நிதி” - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!