India

ரூ.900 கோடி மதிப்புள்ள சஞ்சீவானி கடன் கூட்டுறவு சொசைட்டி ஊழல் : பா.ஜ.க அமைச்சரிடம் விசாரணை நடத்த உத்தரவு!

ராஜஸ்தானில் நடந்த ரூ.900 கோடி மதிப்புள்ள சஞ்சீவானி கடன் கூட்டுறவு சொசைட்டி ஊழல் வழக்கு தொடர்பாக பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விசாரணை நடத்த ஜெய்ப்பூர் நீதிமன்றம் போலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சஞ்சீவானி கடன் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.900 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறப்புப் பிரிவு போலிஸார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரது மனைவி, உறவினர்கள் சிலரின் பெயரையும் சிறப்பு போலிஸார் சேர்த்துள்ளனர். இது தொடர்பான குற்றப்பத்திரிகையிலும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெயரை போலீஸார் சேர்த்திருந்தனர்.

ஆனால், கஜேந்திர சிங் ஷெகாவத் பெயர் சேர்க்கப்பட்டதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்தது. கஜேந்திர சிங் ஷெகாவத் பெயரை நீக்கியதை எதிர்த்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து, ஷெகாவத்தை விசாரிக்க கூடுதல் தலைமை மாஜஸ்திரேட் நீதிபதிக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். கூடுதல் நீதிபதி உத்தரவின் பெயரில் ஷெகாவத்திடம் விசாரிக்க போலிஸாருக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் அசோக் கெலாட் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஈடுபட்டார் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஊழல் வழக்கில் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “புதிய வரைவை விமர்சித்த 3 சுற்றுச்சூழல் இணையதளங்கள் முடக்கம்” - பா.ஜ.க அரசின் பாசிச நடவடிக்கை!