India

“இந்திய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியை அடியோடு நீக்கிய மோடி அரசு” : கொதிக்கும் மாணவர் சங்கம்!

கொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு 30 சதவீத பாடத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தியில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற பாடங்களை மோடி அரசு நீக்கியுள்ளதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கொரோனா பொதுமுடக்க பிரச்சினைகளை கருத்தில் கொண்டு 30% பாடங்களை குறைக்கப்போவதாக அறிவித்தது. ஆனால் அவ்வாறு பாடச்சுமையை குறைப்பதாகக் கூறி தனது காவிபயங்கரவாத அரசியல் நிரலை சி.பி.எஸ்.சி கல்வியில் நிகழ்த்தியுள்ளது.

குறிப்பாக, 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் “ஜனநாயகம், பன்முகத்தன்மை” போன்ற பாடப் பிரிவுகளும், 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் “கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை” ஆகிய பாடப் பிரிவுகளும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் தந்தை பெரியார் சிந்தனைகள், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் "மங்கையராய்ப் பிறப்பதற்கே'' எனும் பாடமும் நீக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன.

இந்திய வரலாற்றில் காவிகளின் சதிகளை வரலாறு நெடுகிலும் எதிர்த்த பாரம்பரியம் தமிழகத்திற்கு உண்டு. எனவே தமிழக வரலாற்றை அழிப்பது காவிகளின் மிகமுக்கியமான நிகழ்ச்சி நிரலாகவுள்ளது. இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மையை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை கல்வித்துறையில் தொடர்ந்து எடுத்துவரும் மத்திய மனிதவள அமைச்சகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

பாடச்சுமையைக் குறைப்பது என்பது பாடங்களை அடியோடு நீக்குவதல்ல; பாடத்தின் சாரம்சமும் உள்ளடக்கமும் குன்றாமல் தேவையானவற்றை மட்டும் வழங்குவதாகும். எனவே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இதனை உள்வாங்கிக்கொண்டு பாடங்களை வகுத்தளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்துத்வ கோட்பாட்டை திணிக்கவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு” - மோடி அரசுக்கு வைகோ கண்டனம்!