India

“எந்த கோப்பை அனுப்பினாலும் தடுத்து நிறுத்தி நிர்வாகத்தை முடக்குகிறார் கிரண்பேடி”: நாராயணசாமி குற்றசாட்டு!

கொரோனா பாதிப்பு குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரியில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. பாதிக்கப்பட்ட நபர்கள் யாரோடு தொடர்பு கொள்கிறார்களோ அவர்களுக்கு வருகிறது. எனவே மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம் என்றும், தற்போது ஆயிரத்தை தாண்டுகின்ற அளவுக்கு மருத்துவ பரிசோதனையை செய்து வருகிறோம். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து உடனடியாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம் என்றார்.

மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு இருக்குமா இல்லையா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் இருந்து வருகிறது. நாம் இந்த கடைகளை மூடுவதன் மூலமாக மட்டும் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலும், வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று முகூர்த்த நாளாக இருக்கிறது. இதனால் மக்கள் அவதியுறுவார்கள். இதனை கருத்தில் கொண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு இருக்காது என்றும் அறிவித்தார்.

மேலும் பேசிய முதல்வர் நாராயணசாமி, “எந்தக் கோப்பை அனுப்பினாலும் துணைநிலை ஆளுநர் அதைத் தடுத்து நிறுத்தி, அதற்கு மாறாக உத்தரவை போட்டு நிர்வாகத்தை முடக்குகின்ற வேலையைச் செய்கிறார். கொரோனா நேரத்தில் கூட அதிகாரிகளுக்கு நாங்கள் உத்தரவிட்டால், அந்த உத்தரவை மீறி துணைநிலை ஆளுநர் மறு உத்தரவை போட்டு அதிகாரிகளுக்கு குழப்பத்தை விளைவிக்கிறார்.

ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி, வீடுகட்டும் திட்டத்துக்கான நிதி, மீனவர்களுக்கான ஓய்வூதியம் போன்றவற்றை தடுத்து நிறுத்துகிறார். இப்படி பல திட்டங்களை துணைநிலை ஆளுநர் தடுத்து நிறுத்துவதால் அரசால் செயல்பட முடியாத நிலையிலும், அதனை எதிர்த்து போராட வேண்டிய நிலையிலும் நாங்கள் இருக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "உதவி செய்வதாக அழைத்துச் சென்று 3 மாதங்களாக பாலியல் தொல்லை" - அயனாவரம் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!