India
சிறு, குறு தொழில்கள் நெருக்கடி கால கடன்களை பெற ஆவன செய்ய வேண்டும் - பிரதமருக்கு வைகோ கடிதம்!
சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் புதிய கடன் பெறுவதற்கான வரையறைகளில் திருத்தம் செய்யக் கோரி பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “பெரும் நிதிச்சுமையில் சிக்கி இருக்கின்ற, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை மீட்பதற்கும், புதிய கடன் வழங்குவதற்கும், 13 மே 2020 அன்று, இந்திய அரசு அறிவித்து இருக்கின்ற உதவிகள், ஆயத்த ஆடைத் தொழில் நிறுவனங்களுக்கு, புதிய நம்பிக்கையைக் கொடுத்து இருக்கின்றது.
எனினும், நெருக்கடி காலக்கடன் குறித்து, ஆயத்த ஆடைகள் தொழில் முனைவோர் தெரிவித்து இருக்கின்ற சில கருத்துகளை, தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.
2020 பிப்ரவரி 29 ஆம் நாள் அன்று, 25 கோடிக்குக் குறைவான கடன் நிலுவையும், 2019/20 ஆம் ஆண்டில் 100 கோடிக்குக் குறைந்த வணிக வரவு செலவு செய்யும் நிறுவனங்கள், புதிய கடன் உதவி பெறத் தகுதி பெற்றவை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2020 ஜூன் 26 ஆம் நாள், நடுவண் அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சித் துறை வெளியிட்டு இருக்கின்ற சுற்றறிக்கையில், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொருள் அல்லது சேவைகளை, நிறுவனங்களின் ஆண்டு வணிக வரவு செலவு கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனக் குறிப்பிட்டு உள்ளது.
அதன்படி, 25 கோடி கடன், 2019/20 ஆம் ஆண்டில் 100 கோடி வணிக வரவு செலவு என்ற வரையறை பொருந்தாது. அதிலும் குறிப்பாக, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு அறிவித்து இருக்கின்ற நெருக்கடி காலக்கடன்கள் பெறுவதற்கான வரையறைகளின்படி, புதிய உதவித் தொகை, கடன் வசதிகளைப் பெறுவதற்கு வகை செய்ய வேண்டும்.
இதன் மூலம், ஆயத்த ஆடைகள் தொழிலையும், அந்தத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!