India

கொரோனாவால் பலியானோரின் உடல்களை பள்ளத்தில் வீசிய பணியாளர்கள் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடல்களை மொத்தமாக பள்ளங்களில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இதுவரை 14,295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 226 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட சம்பவமும், திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவமும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் கர்நாடகா மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்த பணியாளர்கள் அவற்றை பள்ளத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடலை தகுந்த பாதுகாப்போடு அடக்கம் செய்வதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தற்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியர் உடல் வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Also Read: தெர்மல் ஸ்கேனர் சோதனைதான் கொரோனா டெஸ்ட்டா? ஆபத்தான சூழலை அடியோடு நீக்குக - மு.க.ஸ்டாலின் மீண்டும் அட்வைஸ்