India
“நிர்வாகத் திறமையற்றவர் மோடி என்பதை கொரோனா தொற்று உணர்த்தியுள்ளது” - ராணா அயூப் விளாசல்! #CoronaCrisis
உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேலான நாடுகள் கொரோனா வைரஸின் தாக்கத்தால் சிக்கிச் சின்னாபின்னமாகி வருகின்றன. அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
தொடக்கத்தில் கொத்துக்கொத்தாக உயிர் பலிகளை கொண்டிருந்த ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளே தற்போது 3 மாத முழு ஊரடங்குக்கு பிறகு மெல்ல மீண்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் நான்கு கட்ட ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்ட போதும், கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
இதற்கு முக்கிய காரணங்களாக அதிகப்படியான கொரோனா சோதனைகளை மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்றே பல தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆகவே இப்படியான இக்கட்டான சூழல் நிலவும் வேளையில் மக்களை வீட்டிலேயே இருத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தவறிவிட்டது எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
முன்னறிவிப்பில்லாமல், திடீரென மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வேலையின்றி, பசிப்பிணியால் வாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாரை சாரையாக நாட்டின் நெடுஞ்சாலைகள் மார்க்கமாக சொந்த கிராமங்களுக்கு பலநூறு கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்றனர். இந்த அவலத்தைக் கண்டு உலக நாடுகளே விமர்சிக்கும் வகையில் மத்திய மோடி அரசு இருந்து வருகிறது.
இருப்பினும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பா.ஜ.க அரசின் கீழ் இந்தியா சிறந்து விளங்குகிறது என உலக நாடுகள் கூறுவதாக தற்பெருமையுடன் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 476 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் எப்படி உலக அளவில் சிறந்து விளங்கும் நாடு என பிரதமர் மோடியால் பெருமிதம் கொள்ளமுடிகிறது என அரசியல் நோக்கர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இந்நிலையில், அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் உலகளாவிய நிருபரும், எழுத்தாளருமான ராணா அயூப் இந்தியாவில் கள ஆய்வை மேற்கொண்டுள்ளார். அவரது களஆய்வின்படி, பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது போன்ற எந்த ஒரு சிறப்பான சீரான நடவடிக்கையும் கொரோனாவுக்கென அரசு மேற்கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.
நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ள மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர்கள் வசதியில்லாமல் நோயாளிகள் தவித்து வருவதும், அதன் காரணமாக உயிர்கள் பறிபோகும் நிகழ்வும் நடந்தேறி வருகின்றன. அதேபோல, கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா அறிகுறிகளுடன் வரும் மக்களுக்கு சோதனை மேற்கொள்ள கருவிகளே இல்லாத அவலநிலை உள்ளது என ஷகீல் அகமது என்ற மருத்துவர் கூறியதாக ராணா அயூப் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான கொரோனா அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு காசநோய்க்கான மருந்துகளை சான்றிதழ் பெறாத மருத்துவர்கள் கொடுத்து வருவதாகவும், அதனால் ஏராளமான மக்கள் உயிரிழப்பதாகவும் மருத்துவர் ஷகீல் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான நிதி ஆதாரங்களை கொடுப்பதாக ஊடகங்களில் கூறிவிட்டு அதை நிறைவேற்றாமலும் உள்ளது மத்திய மோடி அரசு. மேலும், கொரோனாவை தடுப்பதற்காக PM CARES எனும் நிதியத்தின் மூலம் திரட்டப்பட்ட சுமார் 1.7 பில்லியன் டாலர் நிதியை விடுவிக்காமல் அதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு தனியார் நிதியம் என கைவிரித்தது தொடர்பாகவும் ராணா அயூப் தனது செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு இந்திய மக்கள் கொரோனாவின் பிடியிலும், பொருளாதார இழப்பினாலும் கடுமையாக அவதியுற்று வரும் வேளையில், இந்தியா-சீனா இடையே லடாக் எல்லைப்பகுதியில் இராணுவத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்திய சமூகவியலாளரும், எழுத்தாளருமான பிரதாப் பானு மேத்தா அண்மையில் “தலைமையில்லாமல் பெயரிடப்படாத நீரில் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது” என எழுதியுள்ளதை ராணா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸை தொடக்கத்தில் அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே உலக வல்லரசு நாடான அமெரிக்காவும், பிரேசிலும் தற்போது லட்சோப லட்ச கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ள ராணா அயூப், கொரோனா பரவல் மேன்மேலும் வலுவடைந்து வருவதால் இந்தியாவின் ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்து, 130 கோடி மக்களை நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு நரேந்திர மோடி வழிநடத்துகிறார் என அந்த செய்திக் குறிப்பில் ராணா அயூப் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!