India

“மருத்துவ இடங்களில் OBC இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்” - தி.மு.க தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு!

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அகில இந்திய இட ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க, தி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிடக் கோரி தி.மு.க.,வின் செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள இடங்களில், 15 சதவீத இடங்களை மத்திய அரசுக்கு, அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். அதேபோல, மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீத இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். ஆனால் இந்த இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளதாகவும், இதில், 50 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மறுப்பதால் இப்பிரிவு மாணவர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும், மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்றினால் கூட, நடப்பு கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்பில் மொத்தமுள்ள 8 ஆயிரத்து 137 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 2 ஆயிரத்து 197 இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து 960 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடங்களில் 50 சதவீத இடங்களான 430 இடங்களை பெற தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்போது, தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 425 பேர் மருத்துவ மேற்படிப்பு வாய்ப்பை இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்பட்ட 795 இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 395 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க., எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பியும், அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையிலும், அதற்கு பதிலளித்த மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பரிசீலிக்க முடியாது என தெரிவித்தது.

வழக்கு நிலுவையில் உள்ளதால், மாநில அரசு, 50 சதவீத இடஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றாமல் மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த தடை விதிக்கவேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மட்டும் கிருஷ்ணசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து, மத்திய அரசு சார்பில் இந்த வழக்கில் ஒரு பதில் மனு தாக்கல் செய்தனர்.

மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரக உதவி தலைமை இயக்குனர் ஸ்ரீனிவாஸ் தாக்கல் செய்த அந்த பதில் மனுவில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புக்களுக்கு உச்சநீதிமன்றம் வகுத்த திட்டத்தின் அடிப்படையில், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு ஜூலை 8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளும், வரும் திங்கட்கிழமை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ''மருத்துவ படிப்பில் OBC பிரிவினரின் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டிருக்கிறது'' - மு.க.ஸ்டாலின் கண்டனம்