India

''இப்படியும் ஒரு நம்பிக்கை'' - இறந்த தாயின் சடலத்துடன் 3 நாட்கள் தங்கியிருந்த பெண் டாக்டர்!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்புழச்சேரியை சேர்ந்தவர் ஓமனா (வயது 72). இவருடைய கணவர் ஸ்ரீதரன் பிள்ளை மறைந்த நிலையில், ஓமனா தனது மகள் கவிதா (42) உடன் வசித்து வந்தார். ஓமனா தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கவிதா ஓமியோபதி டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் உடல்நலக்கோளாறு காரணமாக ஓமனா கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதுகுறித்து கவிதா தனது உறவினர்களிடம் தெரிவிக்காமல் தாயின் பிணத்துடன் இருந்துள்ளார். அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் அவர் பிணத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிணத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் செர்புழச்சேரி போலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர் பிணத்துடன் இருந்த கவிதாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது தாயார் மீண்டும் எழுந்து வருவார் என்று நம்பி இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலிஸார் ஓமனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த தாயின் உடலுடன் பெண் டாக்டர் 3 நாட்கள் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சுஷாந்த் சிங் தற்கொலைக்குக் காரணம் இவர்கள் சொல்வது அல்ல” - அதிர்ச்சி கிளப்பிய கங்கனா ரனாவத்!