India

கொரோனா பேரிடரிலும் எல்லையில் தொடரும் போர் பதற்றம் - சந்தேகத்தை கிளப்பும் மோடி அரசின் மௌனம்!

இந்தியா - சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லைகளில் இருநாட்டு எல்லைப் பகிர்வு சரியாக பிரிக்கப்படாததால் இரு நாட்டு எல்லைகளில் அடிக்கடி மோதல் நீடித்து வருகிறது.

முன்னதாக கடந்த 2017ல் சிக்கிம் மாநிலம் டோக்லாமில் இரு நாட்டு படைகளும் நேருக்கு நேர் சந்தித்து 73 நாட்கள் பதற்றம் நீடித்தது. அதனையடுத்து தற்போது 3 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரு நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் சுமார் 6 வாரங்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் இந்தியா - சீனா படையினருக்கு இடையே நடந்த மோதலில் தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியானதாக கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

பிரதமர் மோடி இது குறித்து வாய்திறக்காதது பலருக்கும் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது கொரோனா பேரிடரின் தோல்வியை மறைக்க மத்திய பா.ஜ.க அரசு ஏதேனும் நாடகத்தை நடத்துகிறதா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக கொரோனா தோல்வியை மறைக்கும் நோக்கிலும் பா.ஜ.கவினர் சீன பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீனாவிற்கு எதிராக பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில் எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில்,“பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார்? அவர் ஏன் மறைக்கிறார்? போதும். என்ன நடந்தது என்பது நமக்கு தெரிய வேண்டும். நம்முடைய வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு எவ்வளவு தைரியம்? நம்முடைய நிலங்களை ஆக்கிரமிக்க அவர்களுக்கு என்ன தைரியம்?” என கேள்வி எழுபியுள்ளார்.

இதனிடையே, லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் உச்சபட்சமாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் இரு தரப்பிலும் சேர்த்து 60க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகள் குறித்து தாம் கவலை அடைந்துள்ளதாக ஐ. நா.சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: மக்களுக்கு ஒரு நியாயம்? உங்களுக்கு ஒரு நியாயம்? இ-பாஸ் வாங்காமல் திண்டுக்கல் வரைச்சென்ற அர்ஜூன் சம்பத்!