India

"ஒரே மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சமாக அதிகரிக்கும்” - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஊரடங்கை தளர்த்தினால் ஒரே மாதத்தில் 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு வரும் ஜூலை 15ஆம் தேதி மும்மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கை தளர்த்தினால் சுமார் 8 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படக்கூடும். இந்த நிலை நீடித்தால் பிரேசில், ரஷ்யாவை இந்தியா முந்திச் செல்லும் நிலை ஏற்படும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் பிராமர் முகர்ஜி கூறுகையில், “கொரோனா வைரஸ் பாதிப்பு அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போது கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருந்தது. ஊரடங்கு நடவடிக்கை கொரோனா பரவாமல் தடுக்க பெரிதும் உதவியது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை சந்தித்தது இந்தியா.

லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டு, தொழில்துறை நலிவடைந்ததால் ஊரடங்கை தளர்த்தும் நிலைக்கு மோடி தலைமையிலான அரசு தள்ளப்பட்டது.

ஆனால், தற்போது தினசரி 11 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவிற்கு அடுத்தப்படியாக இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ஒரே நாளில் 380 பேர் பலி.. 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?