India
“ஒருபுறம் ஊரடங்கு தளர்வு; மறுபுறம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு”: மக்களை வஞ்சிப்பதா?- மு.க.ஸ்டாலின் கேள்வி!
"விலைவாசி உயர்வுக்கும், பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும், பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்" என தி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
“பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசும், தமிழக அரசும் போட்டி போட்டுக் கொண்டு உயர்த்திக் கொண்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊரடங்கு துவங்கும்போது 72.28 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இன்று 77.96 ரூபாய்க்கும்; 65.71 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், 70.64 ரூபாய்க்கும் விற்கப்படுவது, வாகனங்கள் வைத்திருப்போரையும், ஏழை - எளிய, நடுத்தர மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி உயர்வு, மத்திய அரசின் தொடர் விலையேற்றம் என்ற இருமுனை தாக்குதலால் சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 5.68 ரூபாயாகவும், டீசல் விலை 4.93 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
"தினம் ஒரு தகவல்" போல் கடந்த மூன்று தினங்களாகத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசு - ஒருபுறம் 'ஊரடங்கு' தளர்வு என அறிவித்துவிட்டு, இன்னொரு புறம் 'பெட்ரோல் டீசல் கட்டண உயர்வு' என்று மக்களை வஞ்சித்து வருவது வேதனையளிக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்த காலங்களில் அனைத்துப் பயன்களையும் அள்ளி எடுத்துக் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு - 'விலை உயர்வை' மட்டும் மக்களின் தலையில் தூக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்?
ஆகவே, விலைவாசி உயர்வுக்கும், பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும், பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!