India

சென்னை உட்பட 38 மாவட்டங்களில் அதி தீவிரமாக பரவும் கொரோனா.. வீடு விடாகச் சென்று சோதிக்க அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் இது வரையில் 2.67 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில், 1.29 லட்சத்து 9,125 பேர் குணமடந்திருந்தாலும் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் முழுமையாக சொந்த ஊருக்கு சென்றடையாத இந்த நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளை வழங்கியுள்ளது மத்திய அரசு. இதனால், மேலும் தொற்று பாதிப்புகள் அதிகரித்தே வருகிறது.

7 ஆயிரத்து 473 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்திருப்பதால் இந்த உயிரிழப்புகளை கட்டுப்படுத்தாவிடில் நாளொன்றுக்கு 1000க்கும் அதிகமானோர் பலியாகக் கூடும் என ஐ.சி.எம்.ஆர். அதிகாரிகள் மத்திய அரசை எச்சரித்திருந்தனர்.

இதனையடுத்து, உயிரிழப்புகளையும், பாதிப்புகள் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மத்திய உள்துறை செயலாளர் ப்ரீத்தி சுதான் தலைமையில் நேற்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனையில் 38 மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர்கள், மாவட்ட மருத்துவமனை முதல்வர்கள் பங்கேற்றனர்.

அதில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் 38 மாவட்டங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.

குறிப்பாக, அந்த 38 மாவட்டங்களில் உள்ள 45 நகராட்சி, மாநகராட்சிகளில் இருந்தே நாட்டின் 75 சதவிகித கொரோனா நோயாளிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை மாதத்தில் 1.5 லட்சமாக அதிகரிக்கும்” : எம்.ஜி.ஆர்.பல்கலை. ஆய்வில் தகவல்!

ஆகவே, மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளில் வீட்டுக்கு வீடு ஆய்வு செய்து பரிசோதனை செய்யவும், அறிகுறிகள் இருப்பின் உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், கூடுமானவரை பரிசோதனைகளை செய்யவும் வேண்டும் என ஆலோசிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகளை 7 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பே செய்திருக்க வேண்டியவை என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Also Read: “உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு - பீகார் தேர்தலை நோக்கி நகரும் அமித்ஷா” : மோடி அரசின் சுயரூபம் அம்பலம்!