India

“ஒரே நாடு ஒரே வணிகமுறை” - அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ‘ஒரே நாடு ஒரே வணிக முறை’ சாத்தியமாகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகிய விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவற்றை இருப்பு வைக்க தற்போது உள்ள கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள புதிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

அதேநேரத்தில் கடுமையான விலை உயர்வு, தேசியப் பேரிடர், யுத்தம் போன்ற காலகட்டங்களில் நுகர்வோரை பாதுகாக்கவும் சட்டத்தில் போதிய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், விவசாய விளைபொருள்களை விவசாயிகள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு அவசர சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ‘ஒரே நாடு ஒரே வணிக முறை சாத்தியமாகும்’ என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

விவசாயிகள் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பெரிய சில்லறை விற்பனையாளர்கள், உணவு பதப்படுத்துவோர், ஏற்றுமதியாளர்களிடம் நேரடி வணிகம் செய்ய மற்றொரு அவசர சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “இதன் மூலம் விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் விளைபொருட்களை இருப்புவைத்து உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யமுடியும். விவசாயிகளின் வருவாய் உயரும். இதற்காக அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ரூ.710 செலுத்த வேண்டியவருக்கு ரூ. 2,140 பில்” - மக்களைக் குழப்பி, பணத்தைச் சுரண்டும் மின்சார வாரியம்!