India

“ஆடுகளை விற்று டிக்கெட் வாங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள்” - விமானம் ரத்தானதால் அதிர்ச்சி!

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலம் செல்ல விமான டிக்கெட்டுகளை பெற ஆடுகள், தங்க நகைகளை விற்றதோடு கடனும் வாங்கியுள்ளனர். அதை வைத்து டிக்கெட் வாங்கிய நிலையில் விமானம் ரத்தானதால் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சோனா முல்லா, ரஹீமா காத்தும், ஃபரித் முல்லா ஆகியோர் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலையின்றி, உணவின்றித் தவித்து வந்துள்ளனர்.

இதனால், சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டு ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில், ஊரிலிருந்து குடும்பத்தினர் தாங்கள் வளர்த்த ஆடுகள், அணிந்திருந்த சிறிதளவு நகைகளை விற்றுப் பணம் சேர்த்ததோடு, கடனும் வாங்கி பணம் அனுப்பியதன் மூலம், கொல்கத்தா செல்ல விமான டிக்கெட்டைப் பெற்றுள்ளனர்.

மும்பை விமான நிலையத்துக்கு ரூ.2000 செலவு செய்து டாக்ஸியில் வந்த பிறகுதான் விமானம் இப்போதைக்குப் புறப்படாது என்று அவர்களுக்குத் தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், குடும்பத்தினரிடம் வாங்கிய பணமும் வீணாகிவிட்டதா என கவலையடைந்தனர்.

இதுதொடர்பாக சோனா முல்லா கூறும்போது, “நான் ஏ.சி ரிப்பேர் ஷாப்பில் பணிபுரிந்தேன். ஊரடங்கு காரணமாக 3 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் இல்லை. ரயில் டிக்கெட் பெற முயற்சித்தும் கிடைக்கவில்லை.

File image

என் மனைவியும், 3 மகள்களும் நான் திரும்பி வரவேண்டும் என்று விரும்பினர். முர்ஷிதாபாத்தில் என் மனைவி 3 ஆடுகளை விற்று அதன் மூலம் ரூ9,600ஐயும் கடனாக ரூ.1000-மும் வாங்கி அனுப்பினார், நாங்கள் டிக்கெட்டுகளை வாங்கினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் வீடியோ மூலம் வைரலான நிலையில், இண்டிகோ விமான சேவை நிறுவனம் இவர்களை வேறு விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது. ஜூன் 1ம் தேதி இவர்கள் மூவரையும் கூடுதல் கட்டணம் எதுவுமின்றி கொல்கத்தா கொண்டு சேர்க்க இண்டிகோ விமான நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Also Read: பட்டினி கொடுமையால் புலம்பெயர் தொழிலாளி பரிதாப பலி : “உயிரிழந்தது தெரியாமல் தாயை எழுப்பமுயன்ற குழந்தை”!