India

“கொரோனாவை எதிர்கொள்ள உங்களின் மருத்துவப் பணியாளர்கள் வேண்டும்” : கேரளாவிடம் உதவி கேட்கும் மகாராஷ்டிரா!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போத மூன்றரை மாதங்களில் பாதிப்பு 1,38845 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 30 லட்சத்துக்கு மேலானோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1,645 ஆகவும் அதிகரித்தது. நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 3,041 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக தினசரி சராசரியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.

அம்மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தனியார் மருத்துவமனைகளை அரசு ஏற்பாட்டின் படி, கொரோனா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றில் அதிகம் பாதிப்பை சந்தித்துவரும் பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பற்றக்குறை இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அதனை ஈடுகட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றக்குறையை சரி செய்ய ர தனியார் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும், புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அம்மாநிலத்துக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் இருந்து தங்கள் மாநிலத்திற்கு 50 மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்களை அனுப்பி வைக்குமாறு அம்மாநில முதல்வர் கேரள அரசிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவிற்கு, மகாராஷ்டிரா அரசு அனுப்பிய கடிதத்தில், எம்.பி.பி.எஸ். முடித்துள்ள மருத்துவர்களுக்கு ரூ.80,000 சம்பளமும், எம்.டி./எம்.எஸ். உள்ளிட்ட படிப்புகளை முடித்துள்ள மருத்துவர்களுக்கு ரூ.2 லட்சம் சம்பளமும், செவிலியர்களுக்கு ரூ.30,000 சம்பளமும் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும்.

மேலும், அவர்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவற்றை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள், மருந்துகள் உள்ளிட்டவைகளையும் மாநில அரசே வழங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read: “மகாராஜா to எல்.ஐ.சி முகவர்” : தன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன் - சுவாரஸ்ய தகவல்கள்!