India

“மிகமோசமான அரசியல் செய்கிறது பா.ஜ.க அரசு” - புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் சச்சின் பைலட் தாக்கு!

உத்தர பிரதேச அரசு காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பது மோசமான அரசியல் என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில துணை முதல்வருமான சச்சின் பைலட் விமர்சித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களைக் காப்பதில் மெத்தனம் காட்டியது பா.ஜ.க அரசு. இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்து தருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளின் விவரங்களைத் தருமாறு உத்தர பிரதேச பா.ஜ.க அரசு கேட்டது. ஆனால், இந்தப் பட்டியலில் ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை காங்கிரஸ் கட்சி அளித்ததாக உ.பி., அரசு, பிரியங்காவின் தனி செயலாளர் சந்தீப் சிங் மற்றும் உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லாலு ஆகியோர் மீது வழக்குப் பதிந்தது.

ஆயிரம் பேருந்துகளையும் சரிபார்க்க வேண்டும் என்று உ.பி. அரசு கோரியதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. மாநில எல்லையில் பேருந்துகளை உ.பி. போலிஸார் மடக்கி நிறுத்தி வைத்ததாகவும் காங்கிரஸ் புகார் தெரிவித்தது. இதற்கு பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில துணை முதல்வருமான சச்சின் பைலட், “பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி உணவும், வாகன வசதியும் ஏற்பாடு செய்து தருகிறது.

எந்த ஒரு அரசாக இருந்தாலும் இதனை வரவேற்க வேண்டும். ஆனால் உத்தர பிரதேச அரசு அனுமதி மறுக்கிறது. பேருந்துகள் செல்ல அனுமதிக்கவில்லை எங்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்கிறது. மோசமான அரசியல் செய்கிறது.” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

Also Read: “இப்போதாவது புரிந்ததே... நன்றி பிரதமரே” - மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி!