India
“ஒரேயொரு வாட்ஸ்அப் குரூப்...” மாவட்டத்தையே கட்டிக்காக்கும் கேரள எம்.எல்.ஏ வீணா ஜார்ஜ் - நெகிழும் மக்கள்!
கேரளாவில் கொரோனாவின் தாக்கம் கண்டறியப்பட்ட நாள் முதலே அங்கு, மாநில மக்களின் நலனுக்கான கம்யூனிச அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்து வருகிறது.
அந்தவகையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள், தாய்மார்களுக்கு என கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வீணா ஜார்ஜ் உருவாக்கிய வாட்ஸ்-அப் குழுவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மார்ச் மாதம் பொது முடக்கம் தொடங்கிய சமயத்தில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரின்சி என்ற கர்ப்பிணி பெண் தன்னுடைய கணவர் பத்தனம்திட்டாவில் வேலை பார்ப்பதால் அங்கு குடிபெயர்ந்திருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது ஊரடங்கால் பிரசவத்திற்கு தாய் வீட்டுக்குச் செல்ல முடியாமல் போயுள்ளது.
ஆகவே, பெரும் மனக் குழப்பத்துக்கு ஆளான ரின்சி, ஆரன்முலா எம்.எல்.ஏவான வீணா ஜார்ஜை தொடர்புகொண்டு தன்னுடைய பிரச்னையை விவரித்திருக்கிறார். அந்த சமயத்தில் கண்ணூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருந்ததால் பத்தனம்திட்டாவில் உள்ள மருத்துவமனையிலேயே ரின்சியை அனுமதித்ததோடு, உதவிக்கு ஒரு பெண்ணையும் பணியமர்த்தி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தார் வீணா.
இந்த உதவியை ரின்சியோடு மட்டும் முடித்துக்கொள்ளாமல், ரின்சி போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண்களும் பயன்பெறும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக வாட்ஸ்-அப் செயலியில் “அம்மையும் குஞ்சும்” (தாயும் சேயும்) என்ற குழுவை ஏற்படுத்தினார் வீணா ஜார்ஜ்.
அந்தக் குழுவில் மாவட்டத்தில் ஊரடங்கால் மாதாந்திர சிகிச்சைக்குச் செல்ல முடியாத கர்ப்பிணிகள், மனக்குழுப்பத்தால் அவதியுறும் பெண்கள், குழந்தைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் என ஆயிரத்துக்கும் மேலானோரை இணைத்து அவர்களுக்கு அந்த குழு மூலம் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருகிறார்.
மேலும், மருத்துவ உதவிகளை உரிய நபர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 4 பிரிவாக வீணா ஜார்ஜ் ஆட்களையும் நியமித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், வாட்ஸ்-அப் குழுவில் பெண்களுக்கான மருத்துவர்களையும் இணைத்து ஆலோசனைகள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் வாட்ஸ்-அப் குழுவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்தக்குழு உறுப்பினர்களின் அக்கம்பக்கத்தினருக்கும் அத்தியாவசிய தேவைகள் சென்றடையும் வகையில் வீணா ஜார்ஜ் பணியாற்றி வருகிறார். இவரது இந்த நடவடிக்கை மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பும் பாராட்டும் பெற்று வருகிறது.
மேலும் இந்த பணிகள் ஊரடங்குக்குப் பிறகும் தொடரும் வகையிலும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளதாகவும் வீணா ஜார்ஜ் தரப்பினர் கூறியிருக்கிறார்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!