India

“ஊரடங்கால் மீண்டும் அதிகரித்த விவசாயிகள் தற்கொலை” : கடந்த 60 நாட்களில் 109 விவசாயிகள் பரிதாப பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கும் 4ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு பாதிப்பால் நாட்டில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் நாடுமுழுவதுமே பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்களுடைய வேலை பறிபோன நிலையில், தங்கள் ஊருக்கு கால்நடையாக நடந்தே செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி தினக்கூலி தொழிலாளர்கள் விவசாயிகள் என கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஊரடங்கில் விவசாயம் நடைபெறாத நிலையில் விவசாய கூலி தொழிலாளர் விவசாயிகள் என பலரும் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதங்களில் மட்டும் சுமார் 109 விவசாயிகள் மகாராஷ்டிராவில் தற்கொலைசெய்துக்கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான தகவலை மகாராஷ்டிரா மாநில அவுரங்கபாத் டிவிஷனல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, “கடந்த நான்கு மாதங்களில் அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் சுமார் 231 விவசாயிகள் மராத்வாடா பகுதியில் தற்கொலை செய்துள்ளனர்.

சராசரியாக நாள் ஒன்றுக்கு இரண்டு பேர் வீதம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இவர்களில், மார்ச்சில் 73 பேரும் ஏப்ரலில் 36 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.

மாநில அரசே வெளியிட்ட இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: போதையில் இருந்தவர்களை தாக்கி மதுபாட்டில்களை பறித்த புதுச்சேரி போலிஸ்: மூவர் கைது.. ஒருவர் தப்பியோட்டம்!