India

“அனைத்தையும் தனியார் வசமாக்கினால் எப்படி திட்டங்களை வகுப்பீர்கள்?”- மோடிக்கு புதுச்சேரி முதல்வர் கேள்வி!

ஊரடங்கு தளர்வுகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தலின்படி அமைச்சரவை கூடி முடிவெடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதன் விவரம் வருமாறு:

“புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்றுவால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் தற்போது இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்து, ரயில்களை இயக்காததால் நடந்து செல்கின்றனர். இது மிகவும் வேதனையான விஷயம்.

புதுச்சேரியில் இருந்து பீகார், உத்தர பிரதேசம் செல்லவுள்ளோர் மனு அளித்துள்ளனர். அசாம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களுக்குச் செல்ல ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் அனுமதி கேட்டுள்ளனர். காரைக்காலில் இருந்து 500 பேரும் புதுச்சேரியில் இருந்து 700 பேரும் உத்தர பிரதேசம், பீகார் செல்லவுள்ளனர்.

மேலும் ரயில் மூலம் மற்ற மாநிலங்களின் தொழிலாளர்கள் செல்ல உள்ளனர். சுமார் ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் கர்நாடக, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இதேபோன்று அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் இங்கே அழைத்து வரப்பட உள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.20 லட்சம் நிதி உதவி குறித்து கடந்த 4 நாட்களாக தெரிவித்து வருகிறார். நேற்று விவசாயம் இன்று, மின்சாரம், அணுசக்தி துறை, விமான துறை, நிலக்கரி சுரங்கங்கள் குறித்து அறிவித்தார். இராணுவ தளவாடங்களை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்க முயற்சிக்கிறார்கள். அரசு ரகசியமாக வைக்கவேண்டியவற்றை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு அழகல்ல. சிறு குறு தொழிற்சாலைகளுக்கு திட்டங்கள் யாரும் மூலம் செயல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இன்றுடன் 54 நாட்கள் ஆகியுள்ளது. மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் காணொளி மூலம் பேசியபோது ஊரடங்கு நீடித்தால் கூட சில தளர்வுகள் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஊரடங்கு உத்தரவு நாளை முடிந்தவுடன் அமைச்சர்களுடன் பேசி தளர்வுகள் குறித்து முடிவெடுக்க உள்ளோம்.

Also Read: “மொத்த இந்தியாவே தனியார் மயம்?” - நிதி அமைச்சர் இன்று வெளியிட்ட India Private Limited அறிவிப்புகள்!

கடைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்க வேண்டும். ஹோட்டல்களில் சமூக இடைவெளியோடு அமர்ந்து உண்ண அனுமதிக்க உள்ளோம். தியேட்டர் தவிர மால்கள் திறக்க அனுமதிக்க உள்ளோம். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க உத்தரவு பிறப்பிக்க உள்ளோம் என்று பிரதமருக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். மத்திய அரசின் கருத்துக்கு பிறகு மாநிலத்தின் அமைச்சரவை கூட்டி மதுக்கடைகளைத் திறப்பது குறித்து முடிவு எடுப்போம்.” என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Also Read: #CoronaUpdates : தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ்!