India

நேருக்கு நேர் டிப்பர் லாரி மோதி 24 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி - ஊரடங்கில் தொடரும் சோகம்!

கொரோனா ஊரடங்கு கொண்டுவரப்பட்டதில் இருந்து பல துயரங்களை ஏழை - எளிய மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்காத அரசால் உணவின்றியும், சாலை விபத்துகளிலும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது உயிரை பறிக்கொடுத்துள்ளனர். கடந்த வாரம் கூட ரயில் மோதி 17 பேர் உயிரிழந்த கொடுமை அரங்கேறியது. நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வு போல், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்துக்களும் தினமும் செய்தியாக வெளிவருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் அவுரையா என்னும் மாவட்டத்தில் பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஊழியர்கள் ஊரடங்கால் வேலை இழந்த நிலையில் தங்களது சொந்த ஊருக்கு லாரியில் சென்றனர். உத்தர பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது அந்த தொழிலாளர்கள் சென்ற லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு லாரி ஒன்று திடீரென மோதியது.

லாரிகள் ஒன்றுக்கு ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சிலரை அப்பகுதி மக்கள் மற்றும் போலிஸார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பசிக் கொடுமை : சுட்டெரிக்கும் வெயிலில் 310 கி.மீ தூரம் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளி பரிதாப பலி!