India

மீண்டும் ரயில்கள் ரத்து - முடிவெடுக்க முடியாமல் மக்கள் நலனோடு மல்லுக்கட்டும் பா.ஜ.க அரசு !

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் இயங்கி வந்த 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க முடிவு செய்த ரயில்வே, மே 12 முதல் படிப்படியாக ரயில் சேவை துவக்கப்படும் என அறிவித்திருந்தது. இதன்படி டெல்லியிலிருந்து 15 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் மே12ம் தேதி ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தது ரயில்வே.

ஊரடங்கு காரணமாக வேலையின்றி வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் பலர், மிகவும் சிரமப்பட்டு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். உண்ண உணவின்றித் தவித்த தொழிலாளர்கள் பலர் வேறு வழியின்றி டிக்கெட் கட்டணம் செலுத்தினர்.

இந்நிலையில், அட்டவணைப்படி, ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் இயங்காது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் பல லட்சக்கணக்கானோர் இருக்கும் நிலையில் மிகக் குறைவான சிறப்பு ரயில் சேவைகளையே தொடர்வதால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தும் தற்போது ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா பரவல் தீவிரம் காரணமாக மீண்டும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளைச் செய்து புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லாமல், அவர்களின் மனநிலையோடும், நம்பிக்கையோடும் விளையாடி வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Also Read: ஒரே மாதத்தில் 20-29 வயதுக்குட்பட்ட 2.7 கோடி பேர் வேலையிழப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்- விளைவு என்னாகும்?