India
ஒரே மாதத்தில் 20-29 வயதுக்குட்பட்ட 2.7 கோடி பேர் வேலையிழப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்- விளைவு என்னாகும்?
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி, கட்டுமானம், சேவைகள் உள்ளிட்ட தொழில் துறை முடங்கியுள்ள நிலையில் பலரும் வேலையிழந்துள்ளனர்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருந்தாலும், வருவாய் இழப்பைச் சரிசெய்ய சம்பளத்தைக் குறைப்பது, வேலையை விட்டு நீக்குவது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன.
இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது.
ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) ஆய்வு நடத்தி வந்தது. இந்நிலையில், சிஎம்ஐஇ வேலையிழப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஏப்ரலில் ஊரடங்கு உத்தரவின்போது 20 முதல் 29 வயதில் உள்ள சுமார் 2.7 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். நாடு முழுவதும் 20 முதல் 24 வயதில் உள்ள 3.42 கோடி பேர் வேலைபார்த்து வந்தனர். இது ஏப்ரலில் 2.09 கோடியாகக் குறைந்தது. 1.3 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், இளம்பெண்கள் வேலையை இழந்தனர்.
அதேபோல 25 முதல் 29 வயதுக்குள்பட்ட 1.4 கோடி பேர் வேலை இழந்தனர். மேலும், 30 முதல் 39 வயதில் உள்ள 3.3 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதில் 86 சதவீதம் பேர் ஆண்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து CMIE நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறும்போது, “இளைஞர்கள் வேலையிழப்பதால் அவர்களது சேமிப்பில் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் இது அவர்களுக்கு சிக்கலை உண்டாக்கும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். கடன் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற எல்லா தரப்பினரையும் விட இளைஞர்கள் வேலையிழப்பது நாட்டின் உற்பத்தியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இதற்கு அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!