India
“அடுத்த 3 மாதங்களுக்கான பி.எஃப் தொகையை அரசே செலுத்தும்” - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்ததையடுத்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததன் முக்கிய அம்சங்கள் வருமாறு :
சிறப்பு திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் அரசு ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கில் 20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் 5 முக்கிய தூண்கள் : பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் வளம், தேவைகள்.
ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பொருளாதார செயல் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும்.
உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். இத்திட்டம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும். மத்திய அரசின் நடவடிக்கையால் 46 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும்.
கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நாட்டை தன்னிறைவு அடையச் செய்துள்ளன.
ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்.
எரிசக்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது.
உலகம் முழுவதற்கும் இன்று இந்தியாதான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது.
ஏழைகளுக்கு இதுவரை ரூ18 ஆயிரம் கோடி மதிப்பிலான 48 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது.
41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண நிதி வங்கிக்கணக்கில் நேரிடையாக செலுத்தப்பட்டுள்ளது.
6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மீது எங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது என்பதை நாங்கள் மறந்துவிடவில்லை. பொது ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் பாதிக்கப்பட்டிருப்பதை அரசு உணர்ந்துள்ளது.
ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது.
குறு தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வரம்பு ரூபாய் 5 கோடியில் இருந்து ரூபாய் 10 கோடி, சிறு தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வரம்பு ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உயர்வு
வருமான வரி தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் 3 மாதங்கள் நீட்டிக்கப்படும். டிடிஎஸ் வரிப்பிடித்தம் அடுத்த ஆண்டு மார்ச் வரையில் 25 சதவிகிதம் குறைக்கப்படுகிறது.
அடுத்த மூன்று மாதங்களுக்கான பி.எஃப் தொகையை அரசே செலுத்தும்; 72 லட்சம் ஊழியர்கள் இதனால் பயனடைவார்கள்.
நிறுவனங்கள் தரப்பிலிருந்தும், தொழிலாளர்கள் தரப்பிலிருந்தும் செலுத்தப்படும் பி.எஃப் பங்களிப்புத் தொகை தற்போதுள்ள 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம் 6.5 லட்சம் தொழில் நிறுவனங்களும், 4.3 கோடித் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!