India
“வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி தொழிலாளர்களுக்கு துரோகம் இழைப்பதா?”: மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
"பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளையும், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்தியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: “பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் “8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி” உத்தரவிட்டிருப்பதற்கும் - உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் அடையாளமாகத் திகழும் தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் ஆகியவற்றைப் பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் நல அமைச்சகம், சம்பந்தம் இல்லாததைப் போல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல் உழைப்புத் தொழிலாளர்கள், பொருளாதாரத்தின் முதுகெலும்புகள் என்பதை ஏனோ துவக்கத்திலிருந்தே மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஏற்க மறுக்கிறது; இதில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகளின் பக்கம் சாய்ந்திடும் நோக்கம் இருக்கிறது. பிழைப்புக்காகச் சொந்த மாநிலம் விட்டு வேறு மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஊரடங்கு நேரத்தில் அவதிக்குள்ளாக்கி - அவர்களின் குடும்பங்களில் வறுமையைத் தாண்டவமாடவிட்டு - பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்களை தாங்கொணாத் துன்பத் துயரங்களுக்கு ஆளாக்கியது அரசு. அவர்கள் தமது மாநிலத்திற்குத் திரும்பிச் செல்வதற்குரிய ரயில் கட்டணத்தைக் கூட வசூல் செய்யும் இதயத்தில் ஈரமற்ற தன்மையை நாடு கண்டது.
தொழிலாளர் விரோத நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக, தற்போது “தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு இடைக்கால நீக்கம் (சஸ்பென்ட்) செய்யப்படுகிறது” என்று உத்தரப்பிரதேச அரசும், “8 மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது” என்று மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில பா.ஜ.க. அரசுகளும் அறிவித்திருப்பது, “ஏழைத் தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம், ஏமாற்றலாம். அவர்கள் உரிமைகளை யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் பறித்துக் கொள்ளலாம்” என்ற ஆபத்தான உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
தொழிலாளர்கள் அனுபவித்து வரும் உரிமைகள், ஏதோ பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் போல், குளிர் பதனப்படுத்தப்பட்ட அறையில் அமர்ந்து பெற்றவை அல்ல; 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பேரணி நடத்தி - ரத்தம் சிந்தி - உயிரைத் தியாகம் செய்து பெற்ற உரிமை!
ஆகவேதான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1986-ல் கோவையில் நடைபெற்ற மே தின நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய போது தொழிலாளர்களின் நலனுக்காக அறிவித்த 6 முழக்கங்களில் “இனி பணி நேரம் 6 மணிதான் எனக் கோரிக்கை வைப்போம்” என்ற முத்தான முழக்கத்தை முன் வைத்தார்.
ஆனால் மத்திய பா.ஜ.க அரசும், அக்கட்சி ஆளும் மாநிலங்களும், தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் - பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை எல்லாம் அமல்படுத்தத் தேவையில்லை என்றொரு முடிவினை எடுத்திருப்பது, ஏற்கனவே தொழிலாளர்கள் பற்றி தமது நெஞ்சத்தில் தேங்கிய நஞ்சைக் கக்குவதாக அமைந்திருக்கிறது.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற சூழலில் - ஒரு முதலுதவிப் பெட்டி வைக்கும் தொழிலாளர் பாதுகாப்பு விதிகளைக் கூட கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று விலக்கு அளிப்பது கொடுமையிலும் கொடுமை; தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் முதலாளிகளுக்குத் தொடர்ந்து தாரைவார்த்து, தனியார்மயப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில்; 44-க்கும் மேற்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களை நான்காகக் குறைக்க முயற்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் துணை போகும் நோக்கில் - அக்கட்சி ஆளும் மாநில முதல்வர்களும், வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்பது, அபாயகரமான போக்கு மட்டுமல்ல - தொழிலாளர்களுக்கு நிரந்தரமான ஆபத்தை ஏற்படுத்துவதும் ஆகும்.
ஊரடங்கு தளர்விற்குப் பிறகு திறக்கப்படும் தொழிற்சாலைகளில் - தொழிலாளர்களுக்காக என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவு வெளியிட்டு வருகிறார். ஆனால் அதற்கு நேர்மாறாக - தொழிற்சாலைகள் எவ்வித தொழிலாளர் நலச் சட்டங்களையும் மதிக்கத் தேவையில்லை என்று பா.ஜ.க. மாநில முதலமைச்சர்கள் உத்தரவு போடுகிறார்கள்.
மத்திய அரசின்கீழ் இயங்கும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளரோ, தொழிலாளர் சட்டங்களை மீறும் வகையில் ஊரடங்குச் சலுகைகளை மாநில அரசுகளுக்குத் தன்னிச்சையாக வழங்கி வருகிறார். ஒரே கட்சி ஆட்சி செய்யும் மத்திய அரசின்கீழ் உள்ள பல்வேறு துறைகளுக்குள்ளும் - அக்கட்சி ஆட்சி செய்யும் மாநில அரசுகளுக்கும் இடையில் ஏன் இத்தனை முரண்பாடுகள், விதவிதமான வேடங்கள்?
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தொழிற்சாலைகள் திறக்கப்படுவதில் தவறில்லை. ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தவிர்த்து, சீரமைக்க - தொழிற்சாலைகளுக்குத் தேவையான “நிவாரணங்களை” மத்திய - மாநில அரசுகள் அளிப்பதில் தவறில்லை. ஆனால் தொழிலாளர்களின் உரிமைகளும் - பணிப் பாதுகாப்பும் - வாழ்வாதாரமும் கண்மூடித்தனமாகப் பறிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது.
தொழிலாளர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட, பாதுகாப்பிற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஆவின் ஊழியர்கள் கொரோனோ தாக்குதலுக்கு உள்ளானது போன்ற அவல நிலை எந்தத் தொழிலாளருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. ஆகவே, பா.ஜ.க. அரசின் “மக்கள் விரோத”, “தொழிலாளர் விரோத" நடவடிக்கைகளை - அப்படியே “காப்பி” அடித்துவரும் அ.தி.மு.க. அரசு - தமிழகத்தில் அதுமாதிரி எந்த ஒரு தொழிலாளர் விரோத முடிவினையும் எடுக்க, கனவில் கூட எண்ணிப் பார்த்திடக் கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
மத்திய பா.ஜ.க. அரசு தனது “கார்ப்பரேட் மனப்பான்மையை”க் கழற்றி வைத்துவிட்டு, தொழிலாளர் விரோத மனப்பான்மையை அடி உள்ளத்தில் இருந்து அகற்றிவிட்டு - கொரோனா நோய்த் தொற்றினால் சோதனை மிகுந்து துன்பங்கள் சூழ்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் , தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளையும், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்தியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச்செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி - அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் தொழிற்சாலைகள் கண்டிப்பாகப் பின்பற்றிட வேண்டும் என்றும் - எந்த ஒரு தொழிலாளர் சட்டத்தையும் எந்த மாநில அரசும் புறக்கணிக்கக் கூடாது என்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் என்ற முறையிலாவது - பிரதமர் அவர்கள் உடனே தலையிட்டு - அனைத்து மாநில அரசுகளுக்கும் “சிறப்பு அறிவுரை” ஒன்றினை உடனடியாக, வெளிப்படையாக அறிவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!