India

“63 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு; ஊரடங்கா? - பொருளாதார நடவடிக்கையா?”: முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில நிபந்தனைகளுடன் சில கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தை அடுத்து மாநில அரசு சில கடைகளை திறக்க நிபந்தனை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மதிய 3 மணிக்குகாணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த சந்திப்பில் மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஆலோசனையில் பொருளாதார நடவடிக்கை குறித்து ஆழமாக விவாதிக்க முடிவு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மே 17ம் தேதிக்குப் பிறகு மேலும் சில தளர்வுகளை நீட்டிப்பது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த முறை மோடி முதல்வர்களுடன் உரையாடும் போது, இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 28,000 ஆக இருந்தது. ஆனால் தற்போது 63 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் பொருளாதாரத்தின் மீது கவணம் செலுத்தும் மோடி அரசுக்கு மே 17ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை முழுமையாக நீக்கும் எண்ணம் இல்லை என்றேத் தெரிகிறது. மக்களை ஊரடங்கின் அமைதியாக வீட்டில் இருக்க சொன்ன அரசு, ஊரடங்கு காலத்தில் உருப்படியான நடவடிக்கை எடுக்காததன் விளைவே பலி எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

எனவே இந்த அரசாங்கத்திற்கு மக்களை காக்கவேண்டும் என்ற அக்கரை இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: “மோடி அரசுக்கு மக்களின் உயிர்மீது கொஞ்சமும் அக்கறையில்லை” : சுகாதாரத்துறை முடிவுக்கு திருமாவளவன் கண்டனம்!