India
“சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிவிக்கை தமிழகத்தை அழிவுப் பள்ளத்தாக்கில் தள்ளிவிடும்” : வைகோ கண்டனம்!
“சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன. அவற்றில் மூன்று முக்கியத் திருத்தங்கள் மத்திய அரசுக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்களை அளிக்கின்றன என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் செயல்படுத்தப்படும் 50 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடுகள் கொண்ட பெருந்திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை கட்டாயமாகும். 1986 இல் நடைமுறைக்கு வந்த சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1994 ஜனவரி 27 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணையின்படி சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை சட்ட ரீதியாக கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
நடைமுறையில் உள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006 இல், சில திருத்தங்களைச் செய்து (எஸ்.ஓ.1119(இ)) 2020 மார்ச் 23 ஆம் தேதி, ஒரு வரைவு அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு தயார் செய்துள்ளது. அதனை ஏப்ரல் 11 ஆம் தேதி அரசு இதழிலும் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையின் மீது அரசு இதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து தெரிவிக்கலாம். மாநில அரசுகளும் கருத்துகளை அளிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் கூறி இருந்தது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தக் கால அவகாசத்தை 2020 ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
“சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன. அவற்றில் மூன்று முக்கியத் திருத்தங்கள் மத்திய அரசுக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்களை அளிக்கின்றன.
முதலாவதாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் நடைமுறையில் செயல்பாட்டில் உள்ள புதிய திட்டங்கள், பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள் கட்டுமானப் பணிகள் இவற்றை எவ்வித தடையுமின்றி தொடரலாம். அரசுக்கு தண்டத்தொகை செலுத்தினால் போதும் அனுமதி கிடைத்துவிடும்.
இரண்டாவதாக 70 மீட்டர் வரையிலும் சாலைகளை அகலப்படுத்துதல், விரிவாக்கத் திட்டங்கள், நீராதாரக் கட்டமைப்புகள், பெரும் கட்டுமானத் திட்டங்கள் போன்ற 14 வகையான பணிகளுக்கும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைப்பவை என்று கருதப்படக்கூடிய திட்டங்களுக்கும் இனி சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை முன் வைக்கத் தேவை இல்லை. சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி தேவை இல்லை.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில் திட்டங்கள் பாதுகாப்புத்துறை திட்டங்கள் என்று மத்திய அரசு வகைப்படுத்தும் திட்டங்கள் எதுவாக இருப்பினும் சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிவிக்கை மற்றும் மக்கள் கருத்துக் கேட்பும் கட்டாயம் இல்லை.
மூன்றாவதாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மற்றும் கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்கள் பற்றியும் விரிவாக்கப் பணிகளுக்கும் சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்த விதிகளின்படி, சுற்றுச் சூழலுக்குக் கேடு பயக்கும் திட்டங்கள் குறித்து சூழலியல்ஆர்வலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் என எவரும் புகார் கூறுவோ, கருத்துத் தெரிவிக்கவோ முடியாது. மத்திய அரசு தேவைப்பட்டால் விசாரணைக்குழு அமைத்தால்தான் மக்கள் கருத்துகளைக் கூறலாம்.
கொரோனா கொள்ளை நோய் நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் சூழலில், எதிர்காலம் இருண்டுவிடுமோ என்ற கவலை சூழ்ந்த வேளையில், மத்திய பா.ஜ.க. அரசு சுமார் 191 திடடங்களைச் செயல்படுத்த துடித்துக்கொண்டு இருக்கின்றது. ஊரடங்கு முடிவதற்குள்ளாக சில திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி பெறவேண்டும் என்று மத்திய அரசு சட்ட மீறலில் சர்வசாதாரணமாக இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் திருத்தப்பட்டால், அவை தமிழகத்திற்குத்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். முல்லைப் பெரியாற்றில் புதிய அணை, காவிரியில் மேகேதாட்டு அணை, தேனி நியூட்ரினோ ஆய்வகம், சேலம் - சென்னை 8 வழிச்சாலை மற்றும் காவிரிப் படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்தி, தமிழகத்தை அழிவுப் பள்ளத்தாக்கில் தள்ளுவதற்கு வழி வகுத்துவிடும்.
எனவே, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை -2020 திருத்தங்களை மத்திய அரசு உடனே திருப்பப் பெற வேண்டும். இந்த வரைவு அறிக்கையை ஏற்கவே முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!