India

மாநில உரிமைகளை அடகு வைத்த எடப்பாடி - மத்திய அரசிடம் சண்டைக்குப் போகும் சந்திரசேகர ராவ்!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு மூன்றாவது கட்டமாக நீடிக்கப்பட்டுள்ளது. தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்துவருகின்றனர்.

இந்த சூழலில் பல மாநிலங்கள் நிதி இல்லாமல் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் அத்தகைய நிலைமை நீடிக்கும் போது அதுகுறித்து எந்தவித கவலையும் படாமல் மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்து மக்களிடம் கொள்ளையடிக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடன் மவுனம் காக்கும் அதேவேளையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட நிதிச் சிக்கலில் இருந்து மாநிலங்களை மீட்கவும் மத்திய அரசு முன்வரவில்லை.

இந்நிலையில் நாங்களாக மீண்டுகொள்கிறோம் என்று கேட்டாலும் அதிகாரத்தையும் மத்திய அரசு வழங்க மறுக்கிறது. எனவே நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தை வழங்கிடுங்கள் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பேசியுள்ளார்.

ஊரடங்கு காரணமாக தெலங்கானா மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊரடங்கை மேலும் 29-ம் தேதிவரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சந்திரசேகர் ராவ், “மத்திய அரசு தவறான கொள்கைகளை பின்பற்றி நடந்து கொள்ளும் விதம் வருத்தம் அளிக்கிறது. மாநில அரசுகளை இந்த அரசாங்க இப்படி நடத்தும் என எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசின் இதுபோன்ற செயலுக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலைக் கொடுக்கப்போகிறது.

ஏற்கெனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. மத்த நிலை நீடிக்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்துக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா அரசின் மாத வருவாய் ரூ.17 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக சரிந்துவிட்டது.

முன்னதாக பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் மாநில அரசு சந்திக்கும் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்தேன். மத்திய அரசிடம் பரந்த நிதிக்கொள்கை இருக்கிறது. ஆனால், எந்தவிதமான பதிலும் பிரதமரிடம் இருந்து இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: நிதி தராத மோடி; டாஸ்மாக் கல்லாவை திறக்கும் எடப்பாடி - மக்களை சவக்குழியில் தள்ளும் அரசுகள்!