India
“இலவச மின்சாரம் ரத்து? - கார்ப்பரேட் நலன் காக்கும் புதிய மின்சார சட்டம்”: மோடி அரசின் அடுத்த சதி அம்பலம்
மத்திய அரசு ‘மின்சார சட்ட திருத்த மசோதா - 2020’ என்ற ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதாவது 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான வரைவு சட்ட அறிக்கையை ஏப்ரல் 17ம் தேதி வெளியிட்டுள்ளது.
வெறும் 21 நாட்களுக்குள் இதுதொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் கூறலாம் என கூறி அறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவு அறிக்கையில், மாநில உரிமைகளுக்கு எதிராகவும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஏழை மக்களிடம் இருந்து பணம் பறிக்க முயற்சிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்த சட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில திருத்தங்களைப் பார்ப்போம்:
வரைவு அறிக்கையின் தொடக்கத்திலேயே, மின் கட்டணம் உற்பத்தி செலவுக்கு இணையாக இருக்கவேண்டும் என்றும் அப்படி இருந்தால் தான் விநியோகிக்கும் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்கிறது.
அடுத்ததாக, மாநிலங்களில் உள்ள மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள், அரசு அளிக்கும் மானியங்களைக் கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்களை நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கலாம். மானியத் தொகை மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும் என்கிறது.
மேலும் மின்சார ஒப்பந்தங்களைச் செயல்படுத்த ஆணையம் ஒன்றை அமைக்க முடிவு செய்ய இந்த சட்டம் வழிவகுத்துள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய அமலாக்க ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கு ஒரு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரமும் வழங்கப்படும்.
அதனால் மின்சாரத்தை வாங்குவது, விற்பது, கடத்துவது (transmission) தொடர்பாக உற்பத்தி நிறுவனம், விநியோக நிறுவனம், டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களுக்கு இடையில் போடப்படும் ஒப்பந்தங்களை இந்த ஆணையம் செயல்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது இதில், மேல் முறையீட்டுத் தீர்ப்பாணையத்தில் தலைவர் மற்றும் அவர் இல்லாமல் மேலும் 7 உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள இந்த சட்டம் இடமளிக்கிறது. இதனால் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பாடும் பிரச்சனை உள்ளிட்ட வழக்குகளை விரைவாக தீர்க்க முடியுமாம்.
மேலும், மின்சாரச் சட்டத்தின் விதிகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும், ஆணையங்களின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவும், அபராதங்களை உயர்த்துவது குறித்தும் இந்தச் சட்டம் முன்மொழிகிறது.
இதற்கு அடுத்தப்படியாக, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க கொள்கை வகுக்கும் ஆவணம் ஒன்றை உருவாக்க இந்த சட்டம் ஏற்பாடு செய்கிறது. எந்த அளவுக்கு நீர் மின் திட்டங்களில் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டும் என இந்த சட்டம் தான் வலியுறுத்தும். அதேப்போல், புதுப்பிக்கத்தக்க அல்லது நீர் மின் திட்டங்களில் இருந்து முடிவு செய்த அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்த தவறினால் அபராதம் விதிக்க முடியும் என அந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய மின்சார சட்டத்தில் உள்ள அம்சங்கள் முற்றிலும் ஏழை - எளிய மக்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “மாநில மின்சார வாரியங்களை பிரித்து, வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் மின் உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்தால், உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க அவர்களே விநியோகிக்கும் உரிமையைப் பெற்றுவிடுவார்கள்.
மேலும், மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்றுவிடும். தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனமாக மாற்றப்படுவதால், சேவைத் துறை என்பது வர்த்தகமாக மாற்றப்படுவதுடன், மின் கட்டணமும் உயரும் ஆபத்து ஏற்படும்.
அதுமட்டுமின்றி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, மின்சாரம் பொதுப் பட்டியலில் உள்ளது. பின்னர் 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டம் கொண்டுவரப்பட்டப்போது மின் கட்டணத்தை மாநில அரசாங்கம் நிர்ணயித்ததைப் பறித்து ஒழுங்கு முறை ஆணையம் கட்டணத்தை நிர்ணயிக்கும் என ஒப்படைக்கப்பட்டது.
இப்போது இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர்களையும், 7 பேர் கொண்ட உறுப்பினர்களையும் மத்திய அரசே தேர்வுசெய்யும் என இந்த புதிய சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதனால் மாநில உரிமைகள் முற்றிலும் பறிக்கப்படும்.
இதில் மற்றொரு மோசமான விசயம் என்னவென்றால், மானியங்களை பணமாகக் கொடுக்கவேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். இதனால் பெரிதும் குழப்பம் ஏற்படும். உதாரணமாக தற்போது ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 4.92 ரூபாய் செலவாகிறது.
அதனை மின்வாரியம் வீடுகளுக்குக் கொடுக்கும் போது முதல் 500 யூனிட் இலவசம் என்று கூறி பல்வேறு விலைகளில் விற்கிறது. குறிப்பாக, 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு 6.60 காசு வரை விற்கப்படுகிறது. இதில் குறைவாக பயன்படுத்துவோருக்கு அடக்க விலையான 4.92 ரூபாயைவிட குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்கும்.
இதனால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பீட்டை மாநில அரசு கொடுக்கும். ஆனால் அந்த முறையை தற்போது மாற்றி, இழப்பீட்டை மக்களிடம் கொடுக்கச் சொல்கிறது இந்த சட்டம். இப்படி மக்களிடம் கொடுப்பது சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியமே இல்லை; ஏனென்றால் ஒரு நுகர்வோர் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை.
ஒருமாதம் அதிகமாகவும், ஒருமாதம் குறைவாவும் பயன்படுத்துவார்கள். இப்படி இருக்கும்போது எப்படி ஒவ்வொரு மாதமும் இந்தத் தொகையைக் கணக்கிட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் எப்படிச் செலுத்த முடியும். உதாரணமாக ஒரு வீட்டின் உரிமையாளர் 4 வீடுகள் வைத்திருப்பார்.
பணத்தை நேரடியாகக் கொடுத்தால் நான்கு வீடுகளுக்கான மின்சார மானியமும் ஒரே நபருக்கே போய் சேரும். வாடகைக்கு கொடுப்பவர்களுக்கு சேராது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்கட்டணமே செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம்.
அப்படி இருக்கும்போது மின் கட்டணத்தை முதலில் செலுத்திவிடுங்கள். பிறகு வங்கிக் கணக்கிற்கு பணம் அளிப்பதாகச் சொன்னால், அது எப்படி நடக்கும். தமிழகத்தில் முன்பே இதுபோல ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது. சுமார் 13 லட்சம் பம்ப் செட்களுக்கு மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பட்டது. அதில் பல விவசாயிகளுக்கு பணம் கையில் சேரவில்லை; பாதி மணி ஆர்டர்கள் திரும்பிவந்துவிட்டன.
மீதமுள்ளவற்றிலும் பல யார் யாருக்கோ போய்ச் சேர்ந்தன. காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய பம்ப் செட்கள் இருக்கின்றன. இணைப்பு யார் பெயரிலோ இருக்கும். இப்போது அவருடைய சந்ததிகள் பயன்படுத்தி வருவார்கள். ஒரே பம்ப்செட்டை இரண்டு மூன்று பேர் பயன்படுத்துவார்கள். மானியத்தை நேரடியாக அளித்தால், யாருக்குக் கொடுப்பார்கள்?.
இதேபோல சட்டத்தில் உள்ள ஒவ்வொரு அம்சங்களும் பல்வேறு குளறுபடிகளும் கார்ப்ப்பரேட் நலன் காக்கும் ஆதரவு அம்சங்களாகவே அமைந்துள்ளது. இந்த கொரோனா பாதிப்பிலும் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உதவும் வகையில் திட்டம் அமைக்காமல், தங்கள் முதலாளிகளுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை அமைக்கும் வேலையை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. குறிப்பாக தற்போது கொண்டுவதுள்ள இந்த சட்டம் மக்கள் நலனுக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!