India
விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் ரத்து? : புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு வைகோ எதிர்ப்பு!
மத்திய பா.ஜ.க. அரசு வேளாண்மை, கைத்தறி நெசவுத் தொழில்களை பாதுகாக்கும் வகையிலும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு ‘மின்சார சட்ட திருத்த மசோதா - 2020’ ஒன்றைக் கொண்டுவந்து, கடந்த ஏப்ரல் 17 அன்று மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது. இந்த மசோதாவில், மாநில மின்சார வாரியங்களை பிரித்து, வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
நாட்டின் மின் உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்தால், உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க அவர்களே விநியோகிக்கும் உரிமையைப் பெற்றுவிடுவார்கள். மேலும், மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்றுவிடும். தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனமாக மாற்றப்படுவதால், சேவைத் துறை என்பது வர்த்தகமாக மாற்றப்படுவதுடன், மின் கட்டணமும் உயரும் ஆபத்து ஏற்படும்.
இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், இது வரை தமிழகம் மற்றும் சில மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் இரத்து செய்யப்படும். மேலும், மிகவும் நலிவுற்ற ஏழைகள், தாழ்த்தப்பட்டோரின் குடிசைகள், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் ரத்தாகும் நிலை உருவாகும்.
கொரோனா ஊரடங்கில் நாட்டின் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வஞ்சகமாக பா.ஜ.க. அரசு இந்த மின்சார சட்ட முன்வடிவைச் சட்டமாக்கத் துடிக்கிறது. தமிழகத்தில் இலவச மின்சாரத்தைப் பெறுவதற்குப் போராடிய விவசாயப் பெருமக்கள் 64 உயிர்களை பலி கொடுத்துள்ளனர்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் இலவச மின்சாரத்தை அளித்து, இவை சமூக நீதி இணைப்புகள் என்று பெருமிதம் கொண்டார். இலவச மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாயிகள் நீர்வளங்களைப் பயன்படுத்தி, மக்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்து, சந்தைககுக் கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து நட்டம் ஏற்பட்டாலும், வேளாண்மைத் தொழிலில் விவசாயிகள் இன்னமும் நீடிப்பதற்கு இலவச மின்சாரமும் ஒரு காரணமாகும். இதனை இரத்து செய்வது மத்திய - மாநில அரசுகள் விவசாயிகளுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
ஏற்கனவே கடனிலும், வறுமையிலும் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் மின் கட்டணத்தை எப்படிச் செலுத்துவார்கள்? அதைப் போல சமூகத்தில் நலிந்தவர்கள், தாழ்த்தப்பட்டோர் என அனைவரின் வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் இரத்து செய்யப்படுமானால், அக்குடும்பங்கள் இருளில் தள்ளப்படும் நிலைதான் ஏற்படும்.
மேலும், நெசவுத் தொழிலை நம்பி இருக்கும் கைத்தறி நெசவாளர்கள் கடும் தொழில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், இலவச மின்சாரத்தையும் இரத்து செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.
தமிழக அரசு சார்பில், மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசு வேளாண்மை, கைத்தறி நெசவுத் தொழில்களை பாதுகாக்கும் வகையிலும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!