India

‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளாக மாறிய பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் - தடுப்பு நடவடிக்கையில் திணறும் மோடி அரசு!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 26,917-லிருந்து 27,892-ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 826-லிருந்து 872-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914-லிருந்து 6,185-ஆக உயர்ந்துள்ளது.

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நீண்ட பட்டியலில் 16வது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக, மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரும் அளவில் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னணியில்தான் உண்மையான பாதிப்பு எண்ணிக்கை தெரிய வந்தது.

ஆனால் இந்தியாவில் அத்தகைய பரிசோதனை பரந்து விரிந்த முறையில் இன்னும் கூட நடக்கவில்லை என்னும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவலில் முதலில் அடையாளம் காணப்பட்ட ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகள் தற்போது மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.

முதன் முதலில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு அதிகப் பாதிப்பை சந்தித்த கேரளா தற்போது மிகச்சிறந்த முன்னேற்றத்தை எட்டியிருப்பதும், கேரளாவில் பாதிப்பு ஏற்பட்டவுடன் மக்களைப் பாதுகாக்க கேரள அரசு களத்தில் இறங்கிய சமயத்தில், பா.ஜ.க. பதவி வெறியோடு காங்கிரசிடமிருந்த ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றிய மத்திய பிரதேசம் தற்போது மிக முக்கியமான ஹாட்ஸ்பாட்டாக மாறியிருப்பதும், மத்திய மோடி அரசும் பா.ஜ.க எந்த அளவிற்கு அலட்சியத்தின் உச்சத்தில் இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காலத்தை ஜனவரி 30 முதல் மார்ச் 24; மார்ச் 25 முதல் ஏப்ரல் 10; மற்றும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 24; என மூன்று கட்டமாகப் பிரித்து பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்கள், மோடி அரசின் அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது. இந்த விபரங்களின்படி, முதலாவது கட்டத்தில் 19 சதவீத பாதிப்பைப் பெற்றிருந்த கேரளா, படிப்படியாக தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக இரண்டாவது கட்டத்தில் 4 சதவீதமாக பாதிப்பு மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்து, மூன்றாவது கட்டத்தில் வெறும் 1 சதவீதம் என்ற நிலையை எட்டியிட்டிருக்கிறது.

ஆனால், முதலாவது கட்டத்தில் 19 சதவீதமாக இருந்த மகாராஷ்டிரா மூன்றாவது கட்டத்தில் 31 சதவீதமும், முதல் கட்டத் தில் 6 சதவீதமாக இருந்த குஜராத் தற்போது 14 சத வீதமும், முதல் கட்டத்தில் 6 சதவீதமாக இருந்த ராஜஸ்தான் தற்போது 9 சதவீதமும் முதல் கட்டத்தில் வெறும் 2 சதவீதமாக இருந்த மத்தியப் பிரதேசம் தற்போது 8 சதவீதம் என்ற நிலையை எட்டியிருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்த வரை முதல்கட்டத்தில் 3 சதவீதமாக இருந்து, இரண்டாவது கட்டத்தில் 13 சதவீதம் என்ற கடுமை யான நிலைமையை எட்டி, மூன்றாவது கட்டத்தில் ஓரளவு தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியதன் விளைவாக 5 சதவீதம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

மரண விகிதத்திலும் பா.ஜ.க ஆளும் குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் கடுமையான பாதிப்பையே சந்தித்துள்ளன. குறிப்பாக குஜராத் 7 சதவீதம் என்ற நிலையிலிருந்து 19 சதவீதம் என்ற நிலைக்கு சென்றுள்ளது.

இந்தியாவில் பா.ஜ.க ஆளும் பல மாநிலங்களில் நிலைமைக் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கை எடுக்கமுடியாமல் மோடி அரசு திணறுவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: “கொரோனா காலத்திலும் விவசாயிகளின் மானியத்திலிருந்து ரூ.700 கோடியை பறித்த மோடி அரசு” : முத்தரசன் ஆவேசம்!