India

ஏழை இந்துகளின் தலையில் இடியாய் இறங்கிய RSS அமைப்பின் மதவெறி - அரேபியர்களின் நடவடிக்கையால் திணறும் பா.ஜ.க!

இது எங்கே போய் முடியுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கொரோனா வந்து இப்படி முடியும் என்று நினைக்கவில்லை.

வளைகுடா நாடுகளில், இஸ்லாமிய நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே, இஸ்லாமியர்களை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் கதை தான்.

இது நீண்ட நாட்களாக நடப்பது தானே, இதை இப்போது ஏன் தீவிரமாக பார்க்கிறார்கள் வளைகுடா நாட்டினர் என்று ஆராய்ந்தால், ஒரு பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் போட்ட ட்விட்டர் பதிவு தான் தீப்பொறி ஆகியிருக்கிறது.

தேஜஸ்வி சூர்யா என்பவர் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 28 வயதில் வெற்றி பெற்று, இந்தியாவின் இளம் வயது எம்.பி என்று பேசப்பட்டுவந்தவர். ஆனால், தான் போட்ட ட்விட்டால் சிறுமைப்பட்டு நிற்கிறார். தீவிர இந்துத்துவா கொள்கைக்காரர். தன் மதத்தை பெருமையாக பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமியர்களை விமர்சிப்பதையே வேலையாகக் கொண்டவர். இதனால், இந்துத்துவா வட்டத்தில், ஒரு கட்டத்தில் ஹீரோவாகிப் போனார்.

அந்தத் திமிரில் அரபிக்கள் குறித்து விமர்சிக்க ஆரம்பித்தார். அதில் எல்லை கடந்து போய், 2015 ஆம் ஆண்டு அரபிப் பெண்களை விமர்சித்தார். துபாயில் இருக்கும் ஒரு அரபி பெண் தொழிலதிபர் கண்ணில் இது பட்டிருக்கிறது. கொரோனா காலம், லாக்டவுன் ஓய்வு என்பதால் இப்படி நேர்ந்திருக்கிறது. அந்த பெண் தொழிலதிபர் இதை கண்டித்து ட்விட் போட்டிருக்கிறார். இதை கண்ட வளைகுடா பகுதியை சேர்ந்த பலரும் ட்விட்டரில் பகிர, விஷயம் நெருப்பாய் தகிக்கிறது.

ஷார்ஜா அரச குடும்பத்தை இளவரசி காசிமி, “தங்கள் நாட்டில் பணியாற்றிக் கொண்டே இஸ்லாமியர்களை தவறாக சமூகவலைதளங்களில் விமர்சிப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என அறிவித்த போது தான் பிரச்சினையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.

இப்போது அரபு நாடுகளில் பணியாற்றுவோரின் சமூக வலைதளப் பக்கங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அப்படி தோண்டி எடுக்கப்பட்ட ஒருவர் மூத்த மருத்துவர். குவைத் அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறவர். அதையும் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். முகநூல் பக்கத்தில் ஒரு இஸ்லாமியர் வெறுப்பு பதிவை இட்டிருக்கிறார். அது அவர் வழக்கம் போலும். வெள்ளை கோட்டுக்குள் இருக்கும் காவி ஆர்.எஸ்.எஸ் அவர். மனதோடு இருந்திருந்தால் தப்பித்திருப்பார். விஷத்தை பொதுவெளியில் கக்கியதால் மாட்டிக் கொண்டார்.

அதனை ஒரு அரபி ட்விட்டரில் பகிர்ந்து புகார் செய்தார். அவ்வளவு தான். மூன்றே மணி நேரத்தில் சீட்டு கிழிக்கப்பட்டது. எப்படியும் இந்திய ரூபாயில் பத்து லட்சத்திற்கு மேல் தான் சம்பளம் இருந்திருக்கும். இந்தியா வந்து வேலை தேடி, கிடைத்து, அப்படியே கிடைத்தாலும் அந்த சம்பளம் கிடைக்குமா என்பது தான் பிரச்சினை.

கத்தார் நாட்டில் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் இதே போன்று ட்விட்டி பெட்டி, படுக்கையோடு ஊருக்கு வர தயாராக உட்கார்ந்திருக்கிறாராம். இவர்களாவது டாக்டர்கள், ஒரு கிளினிக் வைத்தாவது வாழக்கையை ஓட்டலாம். கீழ்நிலை தொழிலாளர்கள் நிலை தான் மோசம்.

ஒரு அரபியர் தன் கார் ஓட்டுநரை அழைத்து அவரது அலைபேசியை எடுத்து வர சொல்லி முகநூல் பக்கத்தை பார்த்திருக்கிறார். இன்னொருவர் டேக் செய்த இஸ்லாமிய வெறுப்பு பதிவு இருந்திருக்கிறது. "லாக்டவுன் முடிந்தவுடன் ஊருக்கு கிளம்பு", என்று சொல்லி விட்டாராம். ஓட்டுநரின் நண்பர் அரபியிடம் பேசி "டேக்" குறித்து விளக்கி காப்பாற்றி இருக்கிறார்.

இன்னொரு நபர் ட்விட்டரில் அழுதுக் கொண்டிருக்கிறார். வேறொருவர் பதிவால் வேலை போய் விட்டதாம். ஊருக்கு போவதற்கு பதில் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என ட்விட் செய்துள்ளார்.

இன்னொரு பக்கம் அரபிக்கள் இந்த வெறுப்புப் பிரச்சார பிரச்சினையால் இந்தியாவை நோக்கி பார்க்க ஆரம்பித்தவர்கள், அடுத்தடுத்த பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது, காஷ்மீர் பிரச்சினை என பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும். 57 இஸ்லாமிய நாடுகளை கொண்ட 'இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு களம் இறங்கி இருக்கிறது.

இந்த நிலையிலேயே, இந்துத்துவா தலைமைகர்த்தாக்கள் கீழே இறங்கி வந்து விட்டார்கள். உடனே இன்றைய எஸ்.வி.சேகர், பா.ஜ.க நாராயணன் ட்விட்களை கணக்கில் கொள்ளாதீர்கள். பாவம், இவர்கள் கடைநிலை ஊழியர்கள்.

இந்தியப் பிரதமர் மோடி ஒரு ட்விட் பதிவிட்டார். “இனம், மதம், சாதி, மொழி, நிறம், எல்லை பார்க்காமல் கொரோனா தாக்குகிறது. இந்த நேரத்தில் நாம் சகோதரத்துவத்தை கடைபிடித்து போராட வேண்டும்”. கொரோனா இந்தியாவில் நுழைந்து ஒரு மாதம் கழித்து தான் இதை உணர்ந்திருக்கிறார் பிரதமர்.

அய்க்கிய அரபு அமீரகத்தின் இந்திய தூதர் பவன் கபூர், சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்திற்கு வந்து விட்டார். "இனப்பாகுபாடு என்பது நமது தார்மீக ஒழுக்கத்திற்கும், சட்டத்திற்கும் புறம்பானது. அமீரகத்தில் இருக்கும் இந்தியர்கள் இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்” என அறிவித்திருக்கிறார்.

ஆனால் இதை பா.ஜ.க தலைவர்கள் தான் உணர வேண்டும். தலைவர்கள் பேசியதை பார்த்து தான், அப்பாவி தொழிலாளர்கள் அதே போல பேசி இப்போது சிக்கிக் கொண்டு விழிக்கிறார்கள். தொழிலாளர்கள் வேலை போனால் அவர்கள் குடும்பம் தான் நடுத் தெருவில் நிற்கும்.

ஏற்கனவே தங்களுக்கேற்ற வேலையோ, சம்பளமோ கிடைக்காமல் தான் அவர்கள் வெளிநாட்டுக்கு பணியாற்ற சென்றார்கள். இப்போது இந்தியாவில் ஏற்கனவே கொரோனாவால் பலரும் வேலை இழந்திருக்கிற சூழலில், வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பி வருபவர்கள் எப்படி தடுமாறுவார்கள் என்பது தான் சிக்கல்.

“குட்டி குலைத்து நாய் தலையில் விடிந்தது” என கிராமத்து பக்கம் பேசுவார்கள். ஆனால், இங்கு நாய் குலைத்து குட்டிகள் தலையில் விடிந்திருக்கிறது. பதவிக்கு தக்கவாறு ஒரு தேஜஸ்வி சூர்யாவின் 'மண்டைக் கொழுப்பு', பல அப்பாவிகளின் வாழ்க்கையை குலைத்துப் போட்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தவறுகள், அப்பாவி ஏழை இந்து தலையில் சுமையாகி விட்டது.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாவும், கலைஞரும் உதாரணங்கள். “மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற ஒரு வாக்கியத்தின் மூலமே எதிரியையும் நேசிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியவர். எம்.ஜி.ஆர் மறைவின் போது, தன் சிலையை உடைத்தவரை, " அந்தச் சின்ன தம்பி என் முதுகிலே குத்தவில்லை, நெஞ்சிலே தான் குத்துகிறான்" என்ற ஒரு வரியிலேயே மன்னித்தார்.

"வளைகுடா நாடுகளிலிருந்து, இந்துக்கள் வெளியேற்றப் பட்டால், இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களுக்கு சிக்கல்", என ஒரு அறிவுஜீவி பிதற்றி இருக்கிறது. வளைகுடாவில் இருக்கும் இந்துக்கள் பிழைக்க அங்கே போனவர்கள். அது அடுத்த நாடு. இங்கிருக்கும் இஸ்லாமியர்களுக்கு இது தாய் தாடு.

இங்கே சீக்கியர்கள், பார்சிக்கள், தமிழர்கள், மலையாளிகள், வங்காளிகள் எப்படியோ, அதே போல் தான் இஸ்லாமியர்களும். மண்ணுக்கு சொந்தக்காரர்கள். பிழைக்க வந்தவர்கள் அல்ல. கொரோனா, வெறுப்பு பிரச்சாரத்திற்கு மருந்து ஆகியிருக்கிறது!

- எஸ்.எஸ்.சிவசங்கர்.

Also Read: “மத வெறுப்பைப் பரப்பி மாட்டிக்கொண்ட பா.ஜ.க ஆதரவாளர்கள்” - ‘திடீர்’ இஸ்லாமிய ஆதரவு வேடம் ஏன்?