India

“சமூக விடுதலைப் போராளி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை அவரவர் வீடுகளில் கொண்டாடுவோம்": முத்தரசன் வேண்டுகோள்!

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும், ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 14 அன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் ஏப்ரல் 17 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் நிகழ்ச்சிகளில், அவர்களின் திருவுருவச்சிலைகளுக்கு பொதுமக்கள் அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் மாலை அணிவிக்கக்கூடாது என தமிழக அரசு தடைவித்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நாளை மறுநாள் 14.04.202020 செவ்வாய் கிழமை சமூக விடுதலைப் போராளி, டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 130 வது பிறந்த நாள். மகாராஷ்டிரா மாநிலம், ரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள அம்பவடெகர் 1891 ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்த பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், இந்துமத வேத, உபநிடதங்கள், நடைமுறை வழக்காறுகளை கற்றுத் தேர்ந்தவர்.

உயர் கல்வி பெற்று, உலக நாடுகளின் அரசமைப்பு முறைகளையும், சட்ட விதிகளையும் கற்றுத் தேர்ந்தவர். நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை வரைவு செய்து வழங்கியவர். சமூக உற்பத்தியின் உயிர்நாடியான உழைக்கும் மக்களை ‘சூத்திரர்கள்’ என்று ஒதுக்கி வைத்தும், ‘பஞ்சமர்’ என்று சமூக வட்டத்தில் இருந்து விலக்கி வைத்தும் இந்தப் பெரும் பகுதியினர் கற்பதற்கு தகுதியற்றோர் தடை செய்து வரும் அநீதி கண்டார்.

ஆறில் ஒரு பங்கு மக்களை தீண்டத்தகாதோர் என இழிவுபடுத்தி வருவதையும், வஞ்சகத்தால் உற்பத்தி சாதனங்களை கைப்பற்றிக் கொண்டவர்களை ‘உயர் குலத்தினர்’ கொண்டாடி வருவதையும் கண்டு கொதித்தெழுந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சமூக விடுதலைப் போராளியானார்.

தனது வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத போராட்டம் நடத்திய அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு தோறும் பொதுக்கூட்டம், கருத்தரங்கம், பேரணி என சிறப்பாக் கடைபிடித்து வருகிறது.

இந்த ஆண்டு கொரானா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு காலம் என்பதால் நாடு முடக்கம் செய்யப்பட்டு, சமூக இடைவெளி, தனித்திருத்தல், ஒதுங்கி வாழ்தல் என்பது நடைமுறை ஆகியுள்ளது.

இந்த நிலையில் அவரவர் வீடுகளில் இருந்த படி சமூக இடைவெளி கடைப்பிடித்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படங்களுக்கு மாலை தூவி, அவரது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “விவசாய விளைபொருட்களில் வர்த்தக சூதாட்டம்” : நியாயமான விலையில் கொள்முதல் செய்ய முத்தரசன் வலியுறுத்தல்!