India

“அரசின் நிதிநிலைக்கும் கொரோனா வந்துவிட்டதா? ஏன் இந்த ஏற்பாடு?” - பா.ஜ.க அரசால் அல்லல்படும் மக்கள்!

இந்தியாவில் பொருளாதார அவசரநிலையா?

இந்தியாவில் சட்டப் பிரிவு 360ன் கீழ் குடியரசுத் தலைவர் பொருளாதார அவசர நிலையைக் கொண்டு வர முடியும். பிரதமரின் அறிவுரையின் பெயரில் இந்த முடிவை குடியரசுத் தலைவர் எடுக்க முடியும். இதன் மூலம் மாநிலங்களின் பட்ஜெட்டை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். மாநிலங்கள் தங்கள் நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட முடியும். சுருக்கமாக பொருளாதார ரீதியாக மாநில அரசுகளை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். இதுதான் பொருளாதார அவசரநிலையின் விளக்கம்.

உலகமெங்கும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போக, மக்கள் பீதியில் பாதியாகிப் போக, பொருளாதாராம் அதல பாதாளத்தை நோக்கிப் பயணிக்க, சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் சிதறிப் போக; பிரதமர் நரேந்திர மோடி மொட்டை மாடியில் விளக்கேற்றச் சொன்னார். கடந்த ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பேசுகையில் இந்தியாவில் எந்தவித பொருளாதார நெருக்கடியும் இல்லை; எங்களின் அரசாங்கத்தின் நிதி நிலைமையும் ஆரோக்கியமானதாகத்தான் இருக்கிறது என்று தனது வழக்கமான பாணியில் அநாயாசமாக ஒரு பொய்யை கட்டவிழ்த்துவிட்டார்.

மிக ஆரோக்கியமான நிதி நிலைமையின் எதிரொலிதான் நேற்று முன் தினம் கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தின் காரணமோ? நேற்று முன் தினம் மாலை பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுதான் ”இரண்டு வருடங்களுக்கு எம்.பி-களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்படும்” என்பதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என்பதுமாகும்.

இதன் மூலம் மத்திய அரசுக்கு 7,900 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் அவற்றை ஒருங்கிணைந்த சிறப்பு நிதியாக அரசு கஜானாவுக்கே செல்லும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இதுதான் நேற்றைய கூற்று. மக்கள் துயரில் துடித்துக் கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு பல மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அதனை ரத்து செய்து பின்னர் மத்திய அரசே ஒருங்கிணைந்த நிதியில் இருந்து அதே தொகையை திருப்பித் தருவோம் என்பது நாடகக் காட்சிகள் போல் உள்ளது. அதுவும் அந்த நாடகத்தில் பிரதமர் மோடி தானே கதாநாயகன் தானே இயக்குனர் தானே வில்லன் தானே தயாரிப்பாளர் என்று அனைத்திலும் தன்னையே முன்னிறுத்திக்கொள்ள முனைகிறார் முற்படுகிறார்.

இதைத்தான் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அனைத்தையும் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே செய்வது பலனளிக்காது, துறை சார்ந்த நிபுணர்களை அழையுங்கள், எதிர்கட்சியிலுள்ள வல்லுநர்களை; முன் அனுபவமுள்ளவர்களையும் அழைத்து ஒருங்கிணைந்த முறையில் செயலாற்ற வேண்டும் என்று கூறுகிறார். இந்தியாவின் நிதிச்சுமையை குறைக்க மோடிக்கு வேறு வழியே இல்லையா? இருக்கிறது. இருந்தாலும் இல்லாதது போல் பிள்ளை விளையாட்டு விளையாடுவார்.

42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருப்புப்பணம் இருப்பதாகச் சொன்னாரே, அந்தப் பணம் எங்கே? ஐந்து லட்சத்து 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட பாரத்மாலா திட்டம் என்னானது? 20,000 கோடியில் மத்திய விஸ்டா மறுசீரமைப்பு திட்டம் என்ற பெயரில் பிரதமர் மேலும் விஸ்தாரமாக இருக்க புதிய பிரதமர் மற்றும் துனை ஜனாதிபதிக்கான மாளிகைகள் கட்டுவதற்கான நிதியை இந்த சிறப்பு நிதியில் சேர்த்து புதிய மாளிகைகள் கட்டும் திட்டத்தை கைவிடலாமே? இது மட்டுமா, நரேந்திர மோடியின் விளம்பர செலவு மட்டும் 2014-2018 வரை 4,806 கோடி ரூபாய் அதாவது ஆண்டொன்றிற்கு 1,202 கோடி.

2014-2019 வரை மோடி தன்னுடைய வெளிநாட்டு பயணங்களுக்காகச் செலவிட்ட தொகை 446 கோடியே 56 லட்சம். இவையெல்லாம் பிரதமரின் கண்களுக்குத் தெரியவில்லையா? அல்லது அவர் அறிவிற்கு எட்டவில்லையா? எம்.பி-களின் சம்பளம் பிடித்தம், தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவைப்பதெல்லாம் ஜனநாயகப் படுகொலை; நிர்வாக சீர்கேடு. அரசின் நிதிநிலைக்குத்தான் கொரோனா வந்திருப்பது போல் தெரிகிறது. மத்திய அரசு சரியான நிதிக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

எம்.பி-களின் நிதி நிறுத்தம் அரசியல் சூழ்ச்சித்தானே தவிர செலவை மிச்சப்படுத்த வேண்டுமென்றால் எத்தனையோ கோடி அனாவசியமாக பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது; செலவிடப்படுகிறது. அவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே போதுமானது. இனியாவது விழித்துக் கொள்வார்களா என்பது பிரதமர் மாளிகையில் விளக்கேற்றியவருக்கே வெளிச்சம்! மக்களாகிய நாம் நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாமல்! குனிந்து குமுறவும் முடியாமல் அல்லல்படுகிறோம்!

- அஜெய் வேலு

Also Read: “உலகமே கொரோனாவுக்கு எதிராக இயங்கியபோது என்ன செய்தார் மோடி?” - மன்னிக்க முடியுமா? Part 1