India

கொரோனா வந்தவர் ஊரடங்கைப் பின்பற்றாவிட்டால் 406 பேருக்கு ஆபத்து - 'R0' என்றால் என்ன தெரியுமா? #Covid19

கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தனிமைப்படுத்தப் படாவிட்டால் அவர் மூலமாக 406 பேருக்கு கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக விலகல் அறிவுறுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் கொரோன வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசியத் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மிகக் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்தும், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊடரங்கு உத்தரவை ஒருவர் பின்பற்றாவிட்டால் அவர் மூலமாக ஒரே மாதத்தில் 406 பேருக்கு கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.

மருத்துவ அறிவியலில் R0 என்பது நோய்த் தொற்றின் அடிப்படை இனப்பெருக்க எண் எனப்படுகிறது. அதாவது தொற்று நோயானது அதன் வீரியமிக்க காலத்தில் எவ்வளவு வேகமாகப் பரவும் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அலகு R Nought (R0) ஆகும்.

ICMR நடத்திய ஆய்வைச் சுட்டிக்காட்டிப் பேசிய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால், “R0-ஐ 2.5 ஆக எடுத்துக் கொண்டால், ஒரு நபர் 30 நாட்களில் 406 பேரைப் பாதிக்கலாம். ஊரடங்கின் மூலம் தனிமைப்படுத்துதல் கடைபிடிக்கப்பட்டால் 75 சதவிகிதம் பரவலைக் குறைந்து, ஒரு நோய்வாய்ப்பட்ட நபர் 2.5 நபர்களை மட்டுமே பாதிக்கச் செய்வார் எனும் அளவிற்குக் குறையலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.