India

“கொரோனா என வதந்தி ; மனவேதனையால் இளைஞர் தற்கொலை” - மதுரையில் ஊர் மக்களால் நடந்த விபரீதம்!

மதுரை வில்லா புரத்தைச் சேர்ந்தவர் முஸ்தபா. கேரளாவில் கூலித்தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு தமிழகம் திரும்பிய முஸ்தபா மதுரையில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கியுள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக சளி, இருமலால் சோர்வாக இருந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவருக்கு கொரோனா இருக்கலாம் என சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சுகாதாரத்துறையினர் முஸ்தபாவையும் அவரது தாயாரையும் 108 மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தனர். ஆனால், இரண்டு மணிநேரத்திற்கு மேல் 108 ஆம்புலன்ஸ் வராததால் அந்தப் பகுதி பொதுமக்கள் சரக்குவாகனம் ஒன்றை தயார் செய்து அவர்களை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு முஸ்தபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனக் கூறி வீட்டிற்கு அவரையும், அவரது தாயாரையும் அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் முஸ்தாபா கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி மக்கள் எடுத்த வீடியோ வைரலாக பரவியது.

இதனால் முஸ்தபா மனவேதனையடைந்தார். இந்த நிலையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சீனி மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் முன்பு திருமங்கலம் கப்பலூர் அருகே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ரயில்வே காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: #Corona LIVE | தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 1477 ஆக உயர்வு!