India
“படேல் சிலை முதல் ராஜபாதை வரை” : மக்கள் பணத்தை வீணடித்துவிட்டு மக்களிடம் நிதி கேட்பது நியாயமா பிரதமரே?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன்கி பாத்' என வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு முறை உரையாற்றும்போதும் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறுவார். அறிவுரைகள் எப்போதும் நாட்டு மக்களுக்கு மட்டுமே.
மாட்டுக்கறி பிரச்னை முதல் குடியுரிமை சட்டம் தொடர்பான பிரச்னை வரை அனைத்திலும் அவரது வலதுசாரி கருத்துகளை மட்டும் சொல்லிவிட்டுச் செல்வார். அந்தவகையில் இந்த முறை, கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் வேளையில் மூன்றாவது முறையாக கொரோனா பற்றி மக்களிடம் உரையாற்றி அறிவுரை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நாட்டுக்கு மக்களே நிதி உதவு அளியுங்கள் என்றும், நிதியை அரசு பகிர்ந்து கொடுக்கும் என கூறியுள்ளார். கொரோனா பேரிடரால் அவதிப்படும் மக்களிடம் பணம் பெற்று அவர்களுக்கு கொடுக்கும் இந்த திட்டத்தை பலரும் ட்விட்டரில் வியந்து பாராட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் மக்களிடையே பேசிய மோடி, உங்களுக்கு சிரமம் அளிக்கும் இந்த முடிவுக்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் கூறினார். மேலும் இந்த கடினமான முயற்சி, போராட்டம் எல்லாம் நாட்டு மக்களின் வாழ்வா, சாவா போராட்டம் போன்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் போராளிகளான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோரை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார்.
மோடி அறிவித்த இந்த முன்று பிரிவினரும் கொரோனாவை நேரடியாக எதிர்த்துப் போராடும் போராளிகள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்தப் போராளிகளை தற்காப்புக் கவசமின்றி போரில் இறக்கியுள்ள சேதி பிரதமருக்கு தெரியுமா எனும் கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, கொரோனாவிற்கு எதிரான போருக்கு நன்கொடை அளியுங்கள். அது ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் நீண்ட பயணத்திற்கு உதவும் என ஒரு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது நீண்ட தூரம் நடைபயணமாகச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் என்ன மாதிரியான எண்ணவோட்டத்தை ஏற்படுத்தும் என்பதை பிரதமரால் புரிந்துகொள்ள முடியுமா?
பொதுமக்களிடம் நிதி திரட்டி சேவை செய்யும் அளவிற்குத் தான் இந்திய பொருளாதாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்தியப் பொருளாதாரம் அதலபாதளத்துக்குச் சென்றது. அந்தச் சூழலில் திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் சேமிப்புப் பணத்தையும் எடுத்துக்கொண்டது பா.ஜ.க அரசு.
சரி இதுஒருபுறமிருக்க, நாடே வறுமையில் வாட குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் ரூ.3,000 கோடியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மிக உயரமான சிலை அமைக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆரம்பகட்டத்தில் இருக்கும்போது , டெல்லியின் ராஜபாதையை மீளுருவாக்கம் செய்ய 20,000 கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுமைக்கும் தொற்றைத் தடுப்பதில் மாநில அரசுகளுக்கு அதிக பணம் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில், டெல்லியின் ராஜபாதையை மீளுருவாக்கம் செய்யவேண்டிய தேவை என்ன?
இந்த முழுப் பணத்தையும் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பு நிதியாக வழங்கலாமே என்கிற யோசனை மோடிக்கு இல்லையா ? படேல் சிலை முதல் ராஜபாதை வரை மக்கள் பணத்தை வீணடித்து விட்டு மக்களிடம் நிதி கேட்பது நியாயமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!