India

கொரோனா அச்சத்தைப் போக்க APP வடிவமைத்த மத்திய அரசு... சிக்கல்கள் எழுவதாக மக்கள் புகார்! corona alert

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இருப்பினும், மக்களிடையே வைரஸ் தொற்று பரவுவது தொடர்பான அச்சம் மேலோங்கி வருகிறது.

தொற்று பயம் காரணமாக வீடுகளில் சுய தனிமைப்படுத்துதலில் உள்ள நபர்கள் மீதும் மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. ஆகையால் மத்திய அரசு சார்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கை விடுக்கும் வகையில் செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா கவச் (Corona Kavach Tracker) என்ற செயலியை மத்திய சுகாதாரத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைந்து உருவாக்கியுள்ளது. இது கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டும் தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பீட்டா பதிப்பின் கீழ் இந்த செயலி கிடைக்கிறது.

இந்த கொரோனா கவச் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் பயணரின் உடல்நிலை சார்ந்த ஆறு கேள்விகளுக்கான படிவத்தை நிரப்ப வேண்டும். படிவம் நிரப்பலுக்கு பிறகு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற குறீடுகள் வரும்.

அதில் பச்சை வந்தால் நலமாக இருப்பதாகவும், மஞ்சள் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்றும், ஆரஞ்சு வந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், சிவப்பு வந்தால் தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அர்த்தமாகும்.

இது முழுக்க முழுக்க ஜி.பி.எஸ்ஸை கொண்டு செயல்படும் செயலியாக உள்ளதால், பயனர் வீட்டை விட்டுச் செல்லும் போதெல்லாம் கவச் பொத்தானை அழுத்தி அதனை ஆக்டிவேட் செய்துகொள்ளவேண்டும். இது அடுத்த 1 மணி நேரத்துக்கு அந்த பயனரின் அசைவுகளை கண்காணிக்கும்.

மேலும், வெளியே செல்லும்போது இதே செயலியை மற்றொருவர் பயன்படுத்தினால் அதன் மூலம் அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்களா இல்லையா என்பதை கொரோனா கவச் செயலி எச்சரிக்கை விடுக்கும்.

ஆனால், இந்த செயலியை பயன்படுத்தும்போது ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் வருவதில் சிக்கல், பயன்படுத்துவதில் சிக்கல் என்றும் தெரிவிக்கப்படுவதால் எந்த அளவுக்கு இந்த செயலியின் பயன்பாடு சாத்தியமாகும் எனத் தெரியவில்லை என கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Also Read: Corona : தனிமைப்படுத்தப் பட்டவர்களை கண்காணிக்க புதிய செயலி - திருவள்ளூர் எஸ்.பியின் அசத்தல் முயற்சி!