India

“நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் பீகார் தொழிலாளர்களுக்கான செலவை அரசே ஏற்கும்”- நிதிஷ் குமார் அறிவிப்பு!

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் 677 இந்தியர்கள், 47 வெளிநாட்டினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநில அரசு மக்களுக்கு பல சலுகை அளித்து வருகிறது. அந்த வகையில், பிற மாநிலங்களில் சிக்கியுள்ள பீகார் மாநில மக்களுக்கான செலவை அரசே ஏற்கும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது மற்றும் பாதிப்புகளை சரி செய்வதற்கான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், பீகார் மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ள தொழிலாளர்கள் ஊரடங்கால் கடும் சிரமங்களைச் சந்தித்துள்ளனர்.

அவர்களுக்கான செலவுத் தொகையை பீகார் மாநில அரசே ஏற்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா பாதிப்பு நிவாரணமாக ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினக்கூலிகளுக்கு தங்கும் முகாம்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: #Corona LIVE | தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 1477 ஆக உயர்வு!