India

“வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை இந்தியா கண்டறியவில்லை” : மோடி அரசு மீது கொரோனா ஆய்வுக் குழு அதிருப்தி!

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் இருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.

ஆனாலும் அரசின் தடுப்பு நடவடிக்கை தீவிர தன்மையோடு இல்லையென்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குறிப்பாக, கொரோனா ஆய்வு குழு, வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை இந்தியா கண்டறியவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய COVID19 ஆய்வுக் குழு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

அதில், “வைரஸ் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா வைரசை கட்டுப்படுத்த சிறப்பாக செயலாற்றியுள்ளது. ஆனாலும், இந்தியாவில் உண்மையிலேயே ‘வைரஸ் பாதித்தோரின் சரியான எண்ணிக்கை’ என்ற முக்கிய கூறு இல்லை.

மேலும், இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவு. பரவலான சோதனை இல்லாத நிலையில், சமூக பரிமாற்றத்தால் வைரஸ் பரவியவர்கள் எண்ணிக்கையை மதிப்பிடுவது முடியாததாக உள்ளது.

மேலும், மருத்துவமனையை தாண்டி, மருத்துவ வசதிகளுக்கு அப்பாற்பட்டு, எந்த அறிகுறியும் இல்லாமல் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எவ்வளவு பேர் என்பதையும் இதுவரை கண்டறியவில்லை” என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

ஆரம்பகட்ட பாதிப்புகளின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் ஆய்வு குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “கொரோனா சிகிச்சை அளிப்பதால் வீட்டைக் காலி செய்ய சொல்கிறார்கள்”: மருத்துவ ஊழியர்களுக்கு நேர்ந்த அவலம்!