India
“மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு கொரோனா பாதிப்பை விட மோசம்” : முத்தரசன் ஆதங்கம்!
கொரோனா நோய்த் தொற்று, நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் இதுவரை (23.03.2020) 400 பேருக்கு மேல் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதும், 7 பேர் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் மரணமுற்று இருப்பதும் இத்தகைய எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது கண்டு கவலை மற்றும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் பாதிப்பே இல்லை என்று கூறி வந்த தமிழ்நாடு அரசு தற்போது 9 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை வரும் மார்ச் 31 வரை முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளது.
இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களை முழுமையாக சோதித்திட வேண்டும். கொரோனா நோய்த் தொற்று உரியவர்களுக்கு சிகிச்சை அளித்திட தனி மருத்துவமனைகளை உடனடியாக உருவாக்கிட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் வெறும் கைத்தட்டல் மூலம் பாராட்டி மகிழ்தல் போதுமானதல்ல.
தங்களை முற்றாக அர்ப்பணித்துக் கொண்டு பணிபுரியும் அவர்களைப் பாராட்டுவது மட்டுமின்றி, அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். குறிப்பாக மற்ற நாடுகளைப் போன்று முழுக் கவசம் அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்கள் அச்சமின்றி, பணியாற்றிட அனைத்து வகை பாதுகாப்பையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழுவீச்சில் அரசு ஈடுபட வேண்டும். பாதிப்புகள் எத்தனை நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கும் என்று தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. முற்றாக ஒழிக்கப்படும் வரை முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதைத் தவிர்த்து வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் சட்டமன்ற, நாடாளுமன்ற கூட்டத் தொடர்களை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருப்பது கேளிக்கைக்குரியதாக உள்ளது. நாடாளுமன்ற சட்டமன்ற கூட்டத்தொடர்களை ரத்து செய்து, மத்திய, மாநில அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அதிகாரிகள் அனைவருடைய கவனமும் கொரோனாவிற்கு எதிரான பணிகளை மேற்கொள்ள வகை செய்திடல் வேண்டும்.
நாடே முற்றிலுமாக ஸ்தம்பித்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் தொழில்களும் முடங்கிப்போன சூழலில் இதனை நம்பி இருக்கும் அப்பாவி மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் இந்நாள் வரை கவலைப்படாமலும், தீர்வு காண உரிய முயற்சிகள் மேற்கொள்ளாத நிலையில் இருப்பது, கொரோனா பாதிப்பை விட மிக மோசமான பாதிப்பாகும்.
தினக் கூலி பெறும் மக்களின் வாழ்க்கை முடங்கிக் கிடப்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு அவர்கள் பசியால் பட்டினிச் சாவிற்கு ஆளாகமல் தடுத்து காத்திட அரசுகள் முன்வரவேண்டும்.
அதனைப் போன்று தொழில் நிறுவனங்களின் கடன், அதற்குரிய வட்டி - மின் கட்டணம், வாடகை போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கும் அவர்களைக் காக்கவும், அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முழு ஆண்டுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து தமிழ்நாடு அரசு குழப்பமற்ற தெளிவான முடிவை மேற்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களைப் போன்று 9-ம் வகுப்பு வரை தேர்வை ரத்து செய்து அவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பதுடன், 12-ம் வகுப்புத் தேர்வுகளை இயல்புநிலை திரும்பும் வரை ஒத்திவைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!