India

“ஈக்கள் மொய்த்த உணவைதான் கொடுக்கிறார்கள்” : இதுதான் நோயைக் குணப்படுத்தும் முறையா? - கனிகா கபூர் ஆவேசம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பெரும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வர தடைவித்தக்கப்பட்டும், இந்தியாவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்தவர்கள் தங்களை தனிப்பைப்படுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், லண்டனில் இருந்து 9-ம் தேதி மும்பை திரும்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூர் 11ம் தேதி லக்னோவிற்கு விமானத்தில் சென்று 13,14 மற்றும் 15ம் தேதிகளில் 3 விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இதனையடுத்து 18ம் தேதியன்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் லக்னோவில் தனியார் மருத்துவனையில் பரிசோதனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் கனிகா கபூர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் கனிகா கபூர் முறையாக சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் மருத்துவர்கள் நேற்றைய தினம் குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “இந்த மருத்துவமனையில் உள்ள சிறப்பு வசதிகள்தான் அவருக்கு வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர் நோயாளிபோல் நடந்துக்கொள்ளாமல் நட்சத்திரம் போல் நடந்துக்கொண்டு குழந்தைத் தன பிடிவாதங்களையும் ஆத்திரமுட்டு செயல்களை செய்கிறார்” என தெரிவித்தனர்.

ஆனால், மருத்துவமனை கூறிய குற்றச்சாட்டுக்கு கனிகா கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “மருத்துவமனையில் எனக்கு ஈக்கள் மொய்த்த இரண்டு வாழைப்பழத்தையும் , ஒரு ஆரஞ்சு பழமும் மட்டுமே கொடுத்தனர்.

சில உணவுக்கள் எனக்கு அலர்ஜி தரக்கூடியவை. அதனால் அதனை நான் எடுத்துக்கொள்ளவில்லை. பசியாக இருந்த எனக்கு மருந்தும் கொடுக்கப்படவில்லை; அதுமட்டுமின்றி எனக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. இந்த சூழலில் இங்கு இருப்பது கொடூரமானது.

எனது அறையை சுத்தம் செய்து தருமாறு மருத்துவரிடம் கூறினால், இது ஒன்றும் நட்சத்திர விடுதி அல்ல என்கிறார். மருத்துவமனையில் அறைகள் அழுக்காக இருக்கிறது. கொசுக்கள் அதிகம் இருக்கிறது. இங்கு இருப்பது சிறையில் இருப்பதுபோல உள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார்.

கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதாக அரசு கூறும் வேலையில் கனிகா கபூர் கூறுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.