India

“கைதட்டல் தேவையில்லை; பாதுகாப்பு உபகரணங்களே உடனடித் தேவை” : கொரோனாவை தடுக்க திட்டம் எங்கே மிஸ்டர்.மோடி?

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

பல மாநிலங்களில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை அம்மாநில அரசுகள் கடைபிடித்து வருகின்றன. குறிப்பாக கல்வி நிலையங்கள், கேளிக்கை அரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. பல முக்கிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டுள்து. இந்தச் சூழலில், பிரதமர் மோடி நேற்றைய தினம் நாட்டு மக்களிடையே காணொளிக் காட்சியின் மூலம் உரையாற்றினார்.

அப்போது, கொரோனா வைரஸை மக்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி மார்ச் 22ம் தேதி மாலை 5-க்கு வீட்டின் நுழைவாயிலில் நின்று மருத்துவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். மருத்துவர்களுக்கு கைத்தட்டல்கள் எழுப்பி உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் பல முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். மோடி நேற்றைய தினம் அறிவித்தவை யாவும் அறிவிப்பாக மட்டுமே உள்ளதே தவிர திட்டமிடல் எதுவும் இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக கொரோனா பாதிப்பால் சிறு நிறுவனங்கள் முதல் பெரும் நிறுவனம் வரை மூடப்பட்டுள்ளன. அதனால் சிறு குறு வணிக நிறுவங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றித் தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்ய எந்த அறிவிப்பையும் பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை.

அடுத்ததாக மருத்துவர்களுக்கு நன்றி சொல்லச் சொல்லும் பிரதமர் மோடி, அவர்களுக்கு ஊக்கத் தொகையோ, சிறப்புத் திட்டமோ அறிவிக்கவில்லை; பல மாநிலங்களில் மருத்துவ பரிசோதனைக்களுக்கான கருவிகள் பற்றாக்குறை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் கொரோனா தடுப்புக்கு தேவையான உபகரணங்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதற்காக ஆகும் செலவையும் அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ளட்டும் என மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார் மோடி.

Also Read: “20,000 கோடி ரூபாயில் மருத்துவ உதவிகள்; ரூ.20-க்கு உணவளிக்கும் உணவகங்கள்” : மக்களைக் காக்கும் கேரள அரசு!

இதனிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன் 20,000 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சமூக இழப்பை அந்த திட்டம் சீர் செய்வதாக உள்ளது.

ஆனால் பிரதமர் மோடி அப்படி எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்காமல், கைதட்டச் சொல்கிறார். கைதட்டலுக்கு பதில்; மருத்துவ உபகரணங்களே தற்போதைய தேவை என்பதை பிரதமர் மோடி புரிந்துள்ளவேண்டும் என மருத்துவர்கள் பலர் விமர்சிக்கின்றனர்.

Also Read: கொரோனா: பிரதமர் மோடி உரையின் கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள் !