India
"மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" - ராஜினாமா முடிவுக்குப் பின் ம.பி முதல்வர் கமல்நாத் உருக்கம்!
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, ஆளுநர் லால்ஜி டாண்டன் மற்றும் சபாநாயகர் பிரஜாபதி ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. மொத்தம் 230 உறுப்பினர்கள் கொண்ட ம.பி மசட்டசபையில், இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரசுக்கு, 113 உறுப்பினர்களும், பா.ஜ.கவுக்கு, 107 உறுப்பினர்களும் உள்ளனர். 22 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால், காங்கிரசின் பலம், 91 ஆக குறைந்துள்ளது.
சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் டாண்டன் உத்தரவிட்டார். எனினும், கடந்த 16ம் தேதி, சட்டசபை கூடியபோது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், 26ம் தேதிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பா.ஜ.கவை சேர்ந்த 9 பேர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் கமல்நாத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ம.பி சபாநாயகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில், உடனடியாக முடிவெடுக்க முடியாது; இரண்டு வார காலம் அவகாசம் தேவை” என்றார். இதற்கு, சிவராஜ் சிங் சவுகான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ராஜினாமா கடிதங்கள், தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்கள் ஆகியவற்றின் மீது, சபாநாயகர் முடிவெடுக்காமல் இருந்தாலும், சட்டசபையில் நம்பிக்கை ஒட்டெடுப்பு நடத்துவதில் எந்தத் தடையும் இல்லை.
சட்டசபை கூட்டத் தொடர் நடக்காத நிலையில், பெரும்பான்மையை அரசு இழந்தால் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகருக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதனால், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட சபாநாயருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
சட்டசபையை இன்று கூட்டி, மாலை, 5 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும், சபாநாயகருக்கு உத்தரவிட வேணடும். நம்பிக்கை ஓட்டெடுப்பை நேரடியாக ஒளிபரப்பவும், வீடியோ எடுக்கவும், ஏற்பாடு செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், கமல்நாத் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெங்களூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். உண்மை கண்டிப்பாக வெளிவரும். மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்கவுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!