India
“20,000 கோடி ரூபாயில் மருத்துவ உதவிகள்; ரூ.20-க்கு உணவளிக்கும் உணவகங்கள்” : மக்களைக் காக்கும் கேரள அரசு!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த வைரஸ் கிருமி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் தற்போது வரை 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து கேரளா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கேளிக்கை அரங்குகளை முடக்கியுள்ளது. சுகாதாரத்துறை இதற்கான பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது, கேரள மாநில மக்களுக்கு கை சுத்திகரிப்பு மருந்துகள் தயாரிக்க அம்மாநில மருத்துவ சேவைகள் கழகம் முடிவெடுத்தது. அதுவும் 10 நாட்களில் ஒரு லட்சம் Sanitizer பாட்டில்களை உற்பத்தி செய்யும் நோக்கில், கேரள மாநில மருந்துகள் உற்பத்தி அமைப்பு கை சுத்திகரிப்பு மருந்துகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. மேலும் அதற்காக 'Break The Chain' என்ற திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்பை மேலும் அதிகரிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் பினராயி பேசினார்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா ஆகியோருடன் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின் போது, கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடர்ந்துள்ள சூழ்நிலை அசாதாரணமானது எனவும், சிறு தவறுகூட நிலைமையை மோசமாக்கி விடக்கூடும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் பேசிய அவர், “வீடுகளில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உணர்த்த வேண்டாம். அதனால்தான் தனிமைப்படுத்தப்பட்டது (கோரண்டைன்) என்கிற வார்த்தைக்குப் பதில் பராமரிப்பு இல்லம் (கேர் ஹோம்) என்கிற வார்த்தையை பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது.
மேலும், கொரோனாவால் மக்கள் பெரிய பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சாதாரன மக்கள் தங்கள் வருவாயை இழந்து வாழ்க்கை முறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் மக்களின் அத்தகைய பாதிப்பைச் சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக நிவாரணத்துக்கு 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சுய உதவிக்குழுக்களுக்கு 2,000 கோடி ரூபாய்க்கு லோன்.
- மாநிலம் முழுவதும் 20 ரூபாய்க்கு உணவளிக்கும் ஆயிரம் அரசு உணவகங்கள் திறக்கப்படும். அதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மின்சாரம், தண்ணீர் கட்டணத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
- அவசர நோயாளிகளுக்கு மருந்து, உணவு கொண்டுச் செல்ல ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும்.
- திரையரங்குகளுக்கு கேளிக்கை வரியில் மானியம் வழங்கப்படும்.
- மருத்துவ உதவிக்கு மட்டும் 500 கோடி ஒதுக்கீடு.
- அரசின் அனைத்து நிலுவைத் தொகையும் வழங்க 14,000 கோடி ஒதுக்கீடு.
- எல்லா குடும்பங்களுக்கும் ஒரு மாதத்துக்கான அரிசி உட்பட உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
- அந்தியோதயா திட்டத்தின் படி பென்சன் வாங்குவோருக்கு இரண்டு மாத பென்சன் தொகை இம்மாதமே வழங்கப்படும்.
- பென்சன் இல்லா குடும்பங்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும். அதற்காக, 1,320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சில சம்பவங்கள் நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. தலையீடுகள் அச்சுறுத்தலாகி விடக்கூடாது. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்கிற சூழ்நிலை உள்ளது. அவர்களும் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு கேரள மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். பலரும் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!