India
“மிகக்குறைவான சோதனைகளையே மேற்கொள்கிறது இந்தியா” - கொரோனா பாதிப்பை அலட்சியமாக எண்ணும் மோடி அரசு!
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
உலக நாடுகளைப் பொறுத்தவரை தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு என்றாலும், பாதிப்பு தீவிரமடையும் போது நிலைமைகள் இன்னும் மோசமாகும் என்றும் கூறப்படுகிறது. மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருவதாக மோடி அரசு கூறும் முறைகள் போதுமானதாக இல்லை என சர்வதேச செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவுறுத்தல்கள் சரிவரப் பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அல்ஜசீரா (Aljazeera) சர்வேதேச ஊடகம் இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, முடிந்தவரை பரவலாக அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வழிகாட்டியுள்ளது.
ஆனால், பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணம் செய்தவர்களை மட்டுமே இந்தியா பரிசோதித்து வருகிறது. மேலும், உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்களை இரண்டு வாரம் தனிமைப்படுத்தல் செய்கிறது.
இந்தியாவில் 8,000 பேரை சோதிப்பதற்கான திறன் இருந்தபோதிலும், ஒரு நாளைக்கு சுமார் 90 சோதனைகளை மட்டுமே நடத்துகிறது; இது சரியல்ல. அதனால் கொரோனா வைரஸிற்கான மிகக் குறைந்த சோதனை நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. தென்கொரியா 10 லட்சம் பேரில் 4 ஆயிரம் பேர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்துகிறது. இந்தியாவோ 10 லட்சம் பேருக்கு வெறும் 5 பேரை மட்டுமே சோதிக்கிறது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது. ஆனால் இந்திய நாட்டின் உயர்மட்ட மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலக சுகாதார அமைப்பின் அறிவுரையை நிராகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, அதன் தலைவர் பலராம் பார்கவா, “இந்தியாவில் கொரோனா ஒரு சமூகநோயாக மாறவில்லை; எனவே உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை, இந்தியாவிற்கு இப்போது தேவையில்லை. அனைவரையும் சோதித்துப் பார்த்தால், அது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே உலக சுகாதார ஆராய்ச்சியாளர் டாக்டர் அனந்த் பன் கூறுகையில், “இந்தியாவின் 130 கோடி மக்களில் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் நெரிசலான நகரங்களில் வாழ்கின்றனர். பலர் சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காமல் உள்ளனர்; எனவே, கொரோனா இந்தியாவில் சமூகம் சமூகமாக பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, இன்னும் விரிவான சோதனை மூலம் மட்டுமே அதை தெரிந்து கொள்ளமுடியும்” என பதில் அளித்துள்ளார்.
மேலும் மற்றொரு மருத்துவ வல்லுநர் கூறுகையில், “இந்தியாவில் தற்போது, 52 கொரோனா வைரஸ் சோதனை மையங்கள் மட்டுமே உள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் குறுகிய சோதனையின் விளைவாக, கொரோனாவைரஸ் தாக்கம் கண்டறியப்படாமலேயே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். எனவே, இந்தியாவின் அரசாங்க புள்ளி விவரங்களைக் காட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.
இந்தியா தனது மொத்த பட்ஜெட்டில் 3.7 சதவிகிதத்தை மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. அவ்வாறிருக்கையில், கொரோனா வைரஸ் தடுப்புக்கு எவ்வளவு தொகையை செலவிடும்? முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனை ஆகியவற்றில் தீவிரம் காட்டுவது ஒன்றே கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வழி” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?