India

ஜோதிராதித்யா சிந்தியாவின் ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஜெய் விலாஸ் அரண்மனை - சில சுவாரஸ்ய தகவல்கள்!

மத்திய பிரதேச மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ள அழகிய நகரமான குவாலியர், அரண்மனைகளுக்கும் கோயில்களுக்கும் உலகப் பெயர் பெற்றது.

குவாலியரில் அமைந்துள்ள ஜெய் விலாஸ் மஹால் நாட்டின் மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது ஜெய் விலாஸ் மஹால்.

மகாராஜா ஸ்ரீமந்த் ஜெயாஜிராவ் சிந்தியா கட்டிய இந்த அரண்மனை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஜெய் விலாஸ் அரண்மனை 1874 ம் ஆண்டில் மகாராஜாதிராஜ் ஸ்ரீமந்த் ஜெயாஜிராவ் சிந்தியா அலிஜா பகதூர் என்பவரால் கட்டப்பட்டது. அப்போது அதன் மதிப்பு 1 கோடி. இந்த அழகான அரண்மனையின் மதிப்பு இன்று 4,000 கோடி ரூபாய். இந்த அரண்மனை பெரிய நீதிமன்ற மண்டபம் மற்றும் 5,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள நூலகத்தையும் கொண்டுள்ளது.

இந்த அரண்மனையை கட்டிடக் கலைஞர் சர் மைக்கேல் ஃபிலோஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். அவர் இத்தாலிய, டஸ்கன் மற்றும் கொரிந்திய பாணியிலான கட்டிடக்கலை ஆகியவற்றிலிருந்து உத்வேகம் பெற்று இதனை வடிவமைத்துள்ளார்.

இந்த அரண்மனையில் 400க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. அவற்றில் ஒரு பகுதி வரலாற்றுப் புதையல் தொடர்பான அருங்காட்சியகமாக தற்போது பயன்படுத்தப்படுகிறது.

1,240,771 சதுர அடி பரப்பளவில் உள்ள அரண்மனையின் முக்கிய பகுதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனையின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்று 3,500 கிலோ எடையுள்ள சரவிளக்கு.

இந்த சரவிளக்கு தொடர்பாக கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது 3,500 கிலோ எடையுள்ள சரவிளக்கினை கூரை தாங்குமா என்று சோதித்துப் பார்க்க 8 யானைகளை வைத்து பரிசோதித்ததாக கூறப்படுகிறது.

இந்த கம்பீரமான அரண்மனை வேல்ஸ் இளவரசருக்கு பெரும் வரவேற்பு அளிக்கும் விதமாக கட்டப்பட்டது. அதுமட்டுமின்றி, ஆறாம் எட்வர்ட் மன்னர் மற்றும் சிந்தியா வம்சத்தின் வசிப்பிடமாகவும் இந்த அரண்மனை இருந்துள்ளது. இது 1964ம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.

புதிதாக பா.ஜ.க -வில் இணைந்துள்ள ஜோதிராதித்யா சிந்தியா இந்த அரண்மனையின் தற்போதைய சட்ட உரிமையாளர் ஆவார். மேலும் அவரது பரம்பரை சொத்து 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையதாக அறியப்படுகிறது.

எப்போதாவது குவாலியர் செல்லும் சூழல் வாய்த்தால், இந்த அரண்மனைக்குச் சென்று பார்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Also Read: காங்கிரஸிலிருந்து ஜோதிராதித்யா சிந்தியா நீக்கம் : 19 MLAக்கள் ராஜினாமா முடிவு - தள்ளாட்டத்தில் ம.பி அரசு!