India

“கோமியம் குடிங்க; கொரோனா நெருங்காது” - காவலரை வலுக்கட்டாமயாக குடிக்க வைத்த பா.ஜ.க தலைவர் கைது!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்குதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இந்தச் சூழலில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் சில கும்பல்களும், இந்துத்வா அமைப்புகளும் கொரோனா வைரஸை பயன்படுத்தி கல்லா கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பிற்போக்கு கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். குறிப்பாக மாட்டுச்சாணம், கோமியம் போன்றவற்றைப் பயன்படுத்தினால் கொரோனா வராது என வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதனிடையே கொல்கத்தாவில் சீருடையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு கோமியத்தை க கொடுத்ததாக கொல்கத்தா பா.ஜ.க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் வடக்கு கொல்கத்தா பா.ஜ.க நிர்வாகியான நாராயணன் சாட்டர்ஜி என்பவர் கோமியம் குடிக்கும் நிகழ்ச்சி ஒன்றை முன்னெடுத்துள்ளார். அதில் கொரோனா பாதிப்பு வராமல் தடுக்க அனைவரும் பசுவின் கோமியத்தை குடிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு வழங்குவதற்காக கலந்துகொண்ட காவலர் ஒருவரை வரவழைத்து வலுக்கட்டாயமாக கோமியம் குடிக்க வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, பாட்டில்களில் கோமியத்தை அடைத்து விற்பனையும் செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த காவலருக்கு உடல்நிலை சற்று மோசமடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் பா.ஜ.க தலைவர் நாராயணன் சாட்டர்ஜி மீது ஜோராபகன் காவல் நிலையத்தில் தனக்கு வலுக்கட்டாயமாக மாட்டு கோமியம் வழங்கப்பட்டதாக புகார் அளித்தார்.

அவரது புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் பா.ஜ.க பிரமுகர் நாராயணன் சாட்டர்ஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து மேற்குவங்க பா.ஜ.க தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோமியம் குடித்த இந்து மகா சபை உறுப்பினர்கள் : தலைநகர் டெல்லியில் ஒரு பார்ட்டி!