India

ம.பி-யை தொடர்ந்து குஜராத்திலும் வேலையைக் காட்டிய பா.ஜ.க - காங்கிரஸ் MLAக்கள் பதவி விலகல்!

மார்ச் 26 ஆம் தேதி குஜராத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில், பா.ஜ.க சார்பில் மூன்று வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் இரண்டு வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

பா.ஜ.கவின் தூண்டுதலின் பேரிலும், குதிரை பேரத்தாலும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், குஜராத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் இப்போது ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்களின் ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, பதவி விலகிய எம்.எல்.ஏக்கள் யார் என்பதை பேரவையில் வெளியிடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 இடங்களில் 2 இடங்கள் காலியாக இருந்தன. 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை176 ஆக குறைந்துள்ளது.

பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 69 ஆக குறைந்துள்ளது. 69 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ள இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்களில் முதல் வேட்பாளர் எளிதாக வெற்றிபெற முடியும். ஆனால் 2-வது வேட்பாளர் வெற்றி பெற காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் உள்ளது.

இதற்கு, காங்கிரஸ் சார்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை கைப்பற்றி விடக்கூடாது என்ற நோக்கில் பா.ஜ.க திட்டமிட்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது எனச் சாடியுள்ளது காங்கிரஸ்.

மேலும், மற்ற கட்சிகளின் ஆட்சியை சீர்குலைப்பதே பா.ஜ.கவின் நோக்கம் என்றும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் காங்கிரஸின் மூத்த தலைவர்களான கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Also Read: காங்கிரஸிலிருந்து ஜோதிராதித்யா சிந்தியா நீக்கம் : 19 MLAக்கள் ராஜினாமா முடிவு - தள்ளாட்டத்தில் ம.பி அரசு!